ADDED : ஜூன் 27, 2025 06:51 AM

மல்யுத்தத்தில் ஆண்கள் மட்டுமின்றி, பெண்களும் சாதனை செய்கின்றனர். பதக்கங்கள் வெல்கின்றனர். இவர்களில் பிரபாவதி லங்கோடியும் ஒருவர். மல்யுத்தத்தில் பல சாதனைகள் செய்துள்ளார்.
பாகல்கோட் மாவட்டம், முதோல் தாலுகாவின், சைதாபுரா கிராமத்தில் வசிப்பவர் பிரபாவதி லங்கோடி, 13. தற்போது இவர் தார்வாடின் ஆதர்ஷா சிறுமியர் பள்ளியில், எட்டாம் வகுப்பு படிக்கிறார்.
இவர் சிறு வயதில் இருந்தே, மல்யுத்தம் கலையில் ஆர்வம் காட்டுகிறார். பயிற்சி பெற்று போட்டிகளிலும் பங்கேற்று பரிசுகள் வென்றுள்ளார்.
கடந்த 2022 மற்றும் 2023ல், பள்ளி கல்வித்துறை சார்பில் நடந்த மாநில அளவிலான மல்யுத்தம் போட்டியில், தங்கப்பதக்கம் பெற்றார். 2024ல் ஸ்கூல் கேம்ஸ் பெடரேஷன் ஆப் இந்தியா சார்பில், மத்திய பிரதேசத்தில் நடந்த போட்டியில் வெள்ளிப்பதக்கம் பெற்றார்.
அதே ஆண்டு கனகபுராவில் நடந்த, மாநில அளவிலான போட்டி மற்றும் உத்தரபிரதேசம், கோரக்பூரில் நடந்த தேசிய அளவிலான போட்டியில், முதல் இடம் பெற்று தங்கப்பதக்கம் பெற்றார். தற்போது சர்வதேச அளவிலான போட்டிகளுக்கு, தன்னை தயார்படுத்துகிறார்.
பிரபாவதி கூறியதாவது:
நாங்கள் விவசாய குடும்பத்தை சேர்ந்தவர்கள். என் சித்தப்பா மல்யுத்த வீரராக இருந்தார். அவர் இறந்த பின், அவருக்கு மாற்றாக என்னை மல்யுத்த வீராங்கனையாக்க வேண்டும் என்பது என் தாத்தாவின் விருப்பம்.
எனவே 2022ல் தார்வாடின் விளையாட்டுத்துறை சார்ந்த விளையாட்டு பயிற்சி விடுதியில், என்னை சேர்த்தார். அங்கு பயிற்சியாளர் சிவப்பா பாட்டீலிடம், பயிற்சி பெறுகிறேன்.
என் தாத்தாவின் விருப்பப்படி, நான் மல்யுத்தத்தில் மேலும் சாதனை செய்ய வேண்டும் என்பது, என் குறிக்கோள். பல்வேறு இடங்களில் நடக்கும், சர்வதேச அளவிலான போட்டிகளுக்கு என்னை தயார்படுத்தி வருகிறேன். தினமும் ஐந்து மணி நேரம் பயிற்சி செய்கிறேன். குடும்பத்தினரும், பயிற்சியாளரும் எனக்கு ஊக்கமளிக்கின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்
- நமது நிருபர் -.