மாவட்ட அளவிலான தசரா போட்டி ஆர்வமுடன் பங்கேற்ற வீரர்கள்
மாவட்ட அளவிலான தசரா போட்டி ஆர்வமுடன் பங்கேற்ற வீரர்கள்
ADDED : செப் 11, 2025 11:42 PM

மைசூரில் மாவட்ட அளவிலான தசரா விளையாட்டு போட்டிகள் நேற்று முன் தினம் துவங்கி, நேற்று மாலை வரை நடந்தன. இதில், தாலுகா அளவிலான போட்டிகளில் வெற்றி பெற்ற1,500க்கும் மேற்பட்ட விளையாட்டு வீரர்கள் பங்கேற்றனர்.
இந்த போட்டிகள் சாமுண்டி விஹார் மைதானம், தெரேசியன் கல்லுாரி, மைசூரு பல்கலைக்கழக விளையாட்டு அரங்கம், எம்.டி.சி., கிளப், மானசகங்கோத்ரி உள்விளையாட்டு அரங்கம் ஆகிய ஐந்து இடங்களில் நடந்தன.
இந்த போட்டிகளை சாமுண்டி விஹார் மைதானத்தில் காங்., - எம்.எல்.ஏ., தன்வீர் சேட் தொடங்கி வைத்து பேசியதாவது:
மாநில அளவில் நடக்கும் விளையாட்டு போட்டிகளில் மிக முக்கியமானவை, தசரா விளையாட்டு போட்டிகளாகும்.
இந்த போட்டியில் மைசூரு மாவட்டத்தை முன்னிலைப்படுத்தும் நோக்கில், அனைத்து வீரர்களும் செயல்பட வேண்டும். மாநில அளவில் மைசூருக்கு முதன்மையான இடம் கிடைக்க வேண்டும்.
மைசூரு விளையாட்டு வீரர்களின் திறமையைவளர்க்க நீண்ட காலமாக செயல்படுகிறது. இதற்காக, ஆண்டு முழுதும் பல விளையாட்டு நிகழ்வுகள், நிகழ்ச்சிகளை நடத்துகிறது. அனைத்து வீரர்களும் வெற்றி, தோல்வி இரண்டையும் ஏற்கும் மனப்பான்மையுடன் போட்டியிட வேண்டும். தேசிய அளவில் சிறந்த வீரர்களாக வருவதற்கு என் வாழ்த்துகள்.
இவ்வாறு அவர் கூறினார்.
தேர்வு ஆடவர் பிரிவில் 100, 200, 400, 800, 1,500, 5,000, 10,000 மீட்டர் ஓட்டப்பந்தயங்கள் நடந்தன. நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், குண்டு எறிதல், மும்முறை தாண்டுதல், ஈட்டி எறிதல் போன்ற விளையாட்டு போட்டிகள் நடந்தன.
மகளிர் பிரிவில் 100, 200, 400, 800, 1,500, 3,000 மீட்டர் ஓட்டப்பந்தயங்கள் நடந்தன. நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், குண்டு எறிதல், மும்முறை தாண்டுதல், ஈட்டி எறிதல் போன்ற விளையாட்டு போட்டிகள் நடந்தன.
இதனுடன் கைப்பந்து, கால்பந்து, கோகோ, கபடி, கூடைப்பந்து, மல்யுத்தம், பூப்பந்து, ஹாக்கி, கைப்பந்து, டேபிள் டென்னிஸ், த்ரோபால், யோகாசனம், நீச்சல் ஆகியவையும் வீரர், வீராங்கனைகள் இருவருக்கும் நடத்தப்பட்டன.
இந்த போட்டியில் வெற்றி பெறுவோரே மாநில அளவிலான தசரா போட்டியில் கலந்து கொள்ள தேர்வு செய்யப்படுவர் என்பது குறிப்பிடத்தக்கது.
-நமது நிருபர் -