/
ஸ்பெஷல்
/
பானுவாசர ஸ்பெஷல்
/
மனைவி கொடுத்த ஊக்கத்தால் முன்னுக்கு வந்த குடும்பம்
/
மனைவி கொடுத்த ஊக்கத்தால் முன்னுக்கு வந்த குடும்பம்
மனைவி கொடுத்த ஊக்கத்தால் முன்னுக்கு வந்த குடும்பம்
மனைவி கொடுத்த ஊக்கத்தால் முன்னுக்கு வந்த குடும்பம்
ADDED : அக் 18, 2025 11:05 PM

ஹைதராபாதில் இருந்து பெங்களூருக்கு பிழைக்க வந்து, பல சவால்களை சமாளித்து ஹைதராபாத் பிரியாணியை பெங்களூரு மக்களுக்கு அளித்து சுவையை ஊட்டி உள்ளார்.
பெங்களூரு எச்.எஸ்.ஆர்., லே - அவுட் ஏழாவது செக்டர் ஒன்பதாவது பிரதான சாலையில் தனியார் வங்கி எதிரில் அமைந்து உள்ளது 'நுான்ஸ் அஸ்லி ஹைராபாத் பிரியாணி'. பிரியாணி தயாராவதற்கு முன்னரே, இக்கடையின் முன் மக்கள் வரிசையாக நின்றிருப்பர். தினமும் மதியம், இரவு நேரத்தில் ஹைதராபாத் பிரியாணியை வாங்க, மக்கள் அதிகளவில் வருகை தருகின்றனர்.
சோர்வு ஹைதராபாத்தை சேர்ந்தவர் முகமது, 65. இவரது மனைவி ஆயிஷா, 53. இவர்கள் பிழைப்பதற்காக 20 ஆண்டுகளுக்கு முன், தங்கள் மகனுடன் பெங்களூரு வந்தனர். பல கஷ்டங்களை அனுபவித்தனர். குடும்பத்தை கவனிக்க போதிய பொருளாதாரம் கிடைக்காததால், மீண்டும் ஹைதராபாத் செல்ல முகமது தீர்மானித்தார்.
அப்போது அவரது மனைவி ஆயிஷா, பெங்களூரு நகரில் மீண்டும் ஒரு வாய்ப்பு தேடலாம் என்று ஆறுதல் கூறினார். அப்போது தான் தன் மனைவி டேஸ்டாக செய்யும் 'ஹைதராபாத் பிரியாணி' தயாரிப்பு தொழிலாக செய்யலாம் என தீர்மானித்தார்.
பிரியாணியை அவரது மனைவி தயாரிக்க, அதற்கான பொருட்கள் வாங்குவது, விற்பனை செய்வது முகமதுவின் பொறுப்பு. ஹோட்டல் வைக்க பொருளாதாரம் இல்லாததால், ஆரம்பத்தில் உணவு தயாரித்து, பெரிய பெரிய மால்களின் வெளியே நடைபாதையில் விற்பனை செய்தனர். இதன் சுவையில் வாடிக்கையாளர்கள் மயங்கினர். நாளுக்கு நாள் மவுசு அதிகரித்தது.
வரவேற்பு பிரியாணியின் சுவையால் ஈர்க்கப்பட்டவர்கள், சாப்பிட்ட பின், வீட்டிற்கு பார்சல் வாங்கி சென்றுள்ளனர். இதனால் பிரியாணி விரைவில் விற்றுவிடும். பல வாடிக்கையாளர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றுள்ளனர். இதை பார்த்த தம்பதி, வாடிக்கையாளர்களை ஏமாற்றக்கூடாது என்று முடிவு செய்தனர். கடை வைப்பதற்காக சிறுக சிறுக பணம் சேர்த்து, பெங்களூரு எச்.எஸ்.ஆர்., லே - அவுட் ஏழாவது செக்டரில் சிறிய கடையை திறந்தனர்.
பிரியாணி சுவையை அறிந்த வாடிக்கையாளர்கள் கடையை தேடி வர துவங்கினர். அத்துடன், புதிய வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை அதிகரித்தது.
தலைமுறை ரகசியம் பிரியாணிக்கான 'ரெசிபி'க்களை வெளியே எங்கும் வாங்காமல், அவரது மனைவி ஆயிஷா, வீட்டிலேயே தயாரிக்கிறார். இதில் விதவிதமான வண்ண பொடிகளும் பயன்படுத்துவதில்லை. சிக்கன் பிரியாணி, மட்டன் பிரியாணி, முட்டை பிரியாணி, கபாபும் விற்பனை செய்கின்றனர்.
பிரியாணி செய்வதற்கு பொறுமை மிகவும் அவசியம். பல தலைமுறைகளாக இந்த ரெசிபியை அவரின் குடும்பத்தினர் கடைபிடித்து வருகின்றனர். தன் தாயார் செய்த ரெசிபியை, தன் மனைவி ஆயிஷாவுக்கு கற்றுக்கொடுத்தார். இதுவே வாடிக்கையாளர்களை ஈர்த்து வருகிறது. தற்போது இவரது மகனும் இத்தொழிலில் பெற்றோருக்கு துணையாக ஈடுபட்டுள்ளார். தற்போது எச்.எஸ்.ஆர்., லே - அவுட் ஆறாவது செக்டர் 15 வது பிரதான சாலையில் இரண்டாவது கடையை திறந்து உள்ளனர்.
சோர்ந்துபோன நேரத்தில் தன் மனைவி கொடுத்த ஊக்கத்தினால், இன்று தினமும் ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு ருசியான உணவு சமைத்து கொடுத்து வருகிறார்.
- நமது நிருபர் -

