ADDED : ஆக 01, 2026 11:02 PM

- நமது நிருபர் -:
பெங்களூரின், 100 ஆண்டுகளுக்கு முந்தைய வரைபடத்தின் மூலம், மழை நீர் கால்வாயை கண்டுபிடித்து, அதில் நீரை நிரப்பியுள்ளார், ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரி கேப்டன், சந்தோஷ் குமார்.
பெங்களூரில் பெருகி வரும் மக்கள்தொகை, மழை நீர் கால்வாய் ஆக்கிரமிப்புகளால், சிறிது நேரம் மழை பெய்தாலே, சாலைகள் நதிகளாகவும், குடியிருப்பு பகுதிகள் குட்டித்தீவுகளாகவும் மாறி விடுகின்றன.
இந்நிலையில், பெங்களூரு ஆனேகல்லின் முதநல்லுாரை சேர்ந்தவர் ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரி கேப்டன் சந்தோஷ் குமார், 48. கடின உழைப்பால், தங்கள் பகுதியில் மழை நீர் தேங்காதபடி, மழை நீர் கால்வாயை மீட்டெடுத்துள்ளார்.
இதற்கான காரணத்தை கூறிய சந்தோஷ் குமார்:
பெங்களூரை நிர்மானித்த கெம்பே கவுடா, 500 ஆண்டுகளுக்கு முன் நகரில் வெள்ளப்பெருக்கு ஏற்படாத வகையில், மழைநீர் கால்வாய்களை வடிவமைத்தார். இந்த கால்வாய் வழியாக செல்லும் மழை நீர், நகரின் ஒவ்வொரு ஏரியையும் நிரப்பும் வகையில் வடிமைக்கப்பட்டிருந்தது.
தற்போது சாதாரண மழைக்கே, நான் வசிக்கும் பகுதிகளில் மழை நீர் சூழ்ந்து கொண்டது. இது வடிய பல மணி நேரமாகிறது. இதற்கான காரணத்தை ஆய்வு செய்தபோது, மழை நீர் கால்வாயை ஆக்கிரமித்து வீடுகள், கட்டடங்கள் கட்டப்பட்டது தெரியவந்தது.
இந்நிலை மாற வேண்டும் என்று யோசித்தேன். இப்போது கட்டப்பட்டு உள்ள மழை நீர் கால்வாய் ஆக்கிரமிப்பு அகற்றுவது கடினம். பல நாள் முயற்சிக்கு பின், 1923ம் ஆண்டு ஆங்கிலேயர் ஆட்சி காலத்திய, பெங்களூரு ஏரி வரைபடத்தை தேடி கண்டுபிடித்தேன்.
இந்த வரைபடத்தை வைத்து, மழை நீர் கால்வாயை பல கிராமங்களில் கண்டுபிடித்தேன். சில இடங்களில், அந்த கால்வாய் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்தது.
சில இடங்களில் கால்வாய் இருந்ததற்கான தடம் அழிந்திருந்தது. முதநல்லுார் ஏரிக்கும். பித்தரகுப்பே ஏரியை இணைக்கும் வழித்தடத்தை ஆராய்ந்த போது, இந்த வழித்தடத்தில் மட்டும் நான்கு ஏரிகள் இருந்தது தெரிந்தது. தற்பாது இந்த தடம் தெரியாமல் அழிக்கப் பட்டிருந்தது. எனவே, சிறிய நீர் பாசன துறை, பெங்களூரு நகர மாவட்ட கலெக்டரின் அனுமதியுடன், உள்ளூர் மக்களுடன் இணைந்து, பட்டலகெரே ஏரிக்கு, 4 கி.மீ., வரை மழை நீர் கால்வாய் துார்வாரும் பணியை மேற்கொண்டோம்.
இதன் பலன் அடுத்த பருவமழை காலத்திலேயே தெரிந்தது. பருவ மழையின் போது, எங்கள் அண்டை பகுதிகள் நீரில் தத்தளித்தன. ஆனால், எங்களின் முதநல்லுார் பகுதியில் எந்த பாதிப்பும் இல்லாமல், வாகனங்கள் இயங்கின.
இதுபோல, ஆனேகல் தாலுகா முழுதும் விரிவுபடுத்தி, 14 பழமையான ஏரிகள் புத்துயிர் பெற்றன. இவற்றில் பல ஏரிகள், 1,000 ஆண்டுகள் பழமையானவை என்றும், முதலாம் ராஜராஜசோழனின் ஆட்சி காலத்தை சேர்ந்தவை என்றும் கூறப்படுகிறது.
பெங்களூரில், 800 கி.மீ., நீளமுள்ள மழை நீர் கால்வாய் உள்ளது. அவற்றில் பல நகரமயமாக்கலால், வழித்தடம் மாற்றி அமைக்கப்பட்டு உள்ளன. சாலைகளும், கட்டடங்களும் இயற்கையான வடிகால் பாதைகளில் கட்டப்பட்டுள்ளன. இதுவே, மழைநீர் பாதுகாப்பாக வெளியேற முடியாமல், நகருக்குள் புகுந்து விடுகின்றன.
இயற்கையாகவே மழை நீர் மண்ணில் ஊடுருவி செல்கிறது அல்லது ஓடைகள், ஏரிகள், ஆறுகளுக்கு செல்கின்றன. இவற்றை திறம்பட பராமரித்தால், ஒரு போதும் வெள்ளம், பேரிடர்களை சந்திக்க தேவையில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
