/
ஸ்பெஷல்
/
பானுவாசர ஸ்பெஷல்
/
இயற்கை உரம் மூலம் லட்சாதிபதியான விவசாயி
/
இயற்கை உரம் மூலம் லட்சாதிபதியான விவசாயி
ADDED : ஜூன் 08, 2025 04:08 AM

தார்வாட் மாவட்டம், ஹிரேகுஞ்சல் கிராமத்தை சேர்ந்தவர் மல்லேஷப்பா, 53. இவர் ஒரு சாதாரண விவசாய குடும்பத்தில் பிறந்தவர். பெரிதாக படிக்கவில்லை. ஆனால், விவசாயத்தில் பல நுணுக்கங்களை கற்று உள்ளார். இதை வைத்து, பணம் சம்பாதித்தும் வருகிறார். இவர், தன்னிடம் உள்ள 20 ஏக்கர் நிலத்தில், சுழன்று, சுழன்று வேலை பார்க்கிறார்.
தண்ணீர் பஞ்சம்
தற்போது, இவர் லட்சங்களில் சம்பாதிப்பதற்கு பின்னால், ஒரு கதை பெரிய கதையே உள்ளது. இவரது கிராமத்தில் 20 ஆண்டுகளுக்கு முன், கடும் தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டது. விவசாய நிலங்களில் தண்ணீர் பாய்ச்ச முடியாத அவல நிலை ஏற்பட்டது. இதனால், விவசாயிகள் பலரும் நஷ்டத்தை சந்தித்தனர். ஆனால், மல்லேஷப்பாவும் சிக்கவில்லை.
அந்த சமயத்தில் கடவுள் போல விவசாயி அதிகாரி ஒருவர், மண்புழுக்களை பயன்படுத்தி மண்ணின் தரத்தை உயர்த்துவது குறித்து எடுத்துரைத்து உள்ளார். அப்போது, மண்புழு உரம், மாட்டு சாணத்தை பயன்படுத்தி உரம் தயாரிக்கும் வேலைகளில் ஈடுபட்டார். இதற்கு குறைந்த அளவு தண்ணீரே தேவைப்பட்டது.
மண்புழு உரம்
இதை பயன்படுத்தி, மண்புழு உரங்களை தயாரித்தார். இந்த உரங்களை அவரது நிலத்தில் பயன்படுத்தினார். இதனால், மண்ணின் தரம் உயர்ந்தது. மிளகாய், கடுகு, மசாலாப் பயிர்கள், சோளம், கோதுமை, பருப்பு, கொய்யா, கறிவேப்பிலை, நெல்லிக்காய் ஆகியவை பயிரிட்டார். இவை அனைத்தும் விளைந்து நல்ல மகசூல் தருகிறது.
இதை பார்த்த மற்ற விவசாயிகள் தங்கள் கிராமத்தில் விளையாத பல பயிர்களையும் பயிரிட்டு, மல்லேஷப்பா ஜெயித்து காட்டியை பார்த்து அசந்தனர். மேலும், ஒன்பது நாட்டு மாடுகள், இரண்டு எருது ஆகியவற்றை வாங்கி வளர்த்து வருகிறார்.
மாட்டு சாணம்
இவை போடும் சாணத்தை வைத்து, உரம் தயாரித்து அதையும் நிலத்தில் பயன்படுத்துகிறார். மாட்டின் மூலம் பாலும், உரமும் தயாரித்து வருகிறார். இதை தன் நிலத்தில் உரமாக பயன்படுத்தி ஆண்டுக்கு ஏழு லட்சம் ரூபாய் சம்பாதிக்கிறார். தன் நிலத்தில் உள்ள வேப்ப மரங்களிலிருந்து அதன் விதைகளை எடுத்து, அவற்றை வைத்து எண்ணெய் மற்றும் புண்ணாக்கு தயாரிக்கிறார். ஆண்டுக்கு 17 கிலோ புண்ணாக்கு தயாரித்து விற்று வருகிறார்.
இவரது ஆண்டு வருமானம் மழையை பொறுத்து மாறுபடும். ஆண்டுக்கு குறைந்தபட்சம் 3 முதல் 4 லட்சம் ரூபாயும்; அதிகபட்சமாக 7 லட்சம் ரூபாயும் சம்பாதிக்கிறார்.
லட்சத்தில் வருமானம்
இதில், முக்கியமான விஷயம் என்னவென்றால் மல்லேஷப்பா உரத்திற்கு என பெரிதாக செலவு செய்வதில்லை.
அதுபோல தன் நிலத்தில் செயற்கை ரசாயனங்களையும் பயன்படுத்துவதில்லை. இதனால், விதைகளுக்கு மட்டும் வெறும் ஆயிரக்கணக்கில் செலவு செய்து, தன் கடின உழைப்பினால் ஆண்டுக்கு லட்சத்தில் சம்பாதிக்கிறார். தற்போது, இவரிடம் பல விவசாயிகள் யோசனைகள், நுணுக்கங்களை கேட்டு வருகின்றனர்.
மல்லேஷப்பாவின் பொன்னான வார்த்தைகள்:
என் தோட்டத்தில் விளையும் பொருட்கள் அனைத்தும் தரமானவை. முன்னோர்கள் பயன்படுத்திய விவசாய நுணுக்கங்களையே நானும் கடைபிடிக்கிறேன்.
வரும் தலைமுறையினருக்காக சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டும். என் திறமையை பாராட்டி 2021 ல் 'தாதா சாகேப் பால்கே' விருது வழங்கப்பட்டது. நிலத்தின் தன்மை, மூதாதையரின் அறிவை கணக்கிட்டு விவசாயம் செய்தால் அனைவரும் வெற்றி பெறலாம்.
இவ்வாறு அவர் கூறினார்
- நமது நிருபர் -.