/
ஸ்பெஷல்
/
பானுவாசர ஸ்பெஷல்
/
குழந்தைகளின் 'ஒளிமயமான எதிர்காலம்' என பெற்றோர் பூரிப்பு
/
குழந்தைகளின் 'ஒளிமயமான எதிர்காலம்' என பெற்றோர் பூரிப்பு
குழந்தைகளின் 'ஒளிமயமான எதிர்காலம்' என பெற்றோர் பூரிப்பு
குழந்தைகளின் 'ஒளிமயமான எதிர்காலம்' என பெற்றோர் பூரிப்பு
UPDATED : அக் 05, 2025 12:02 PM
ADDED : அக் 04, 2025 11:07 PM

'தமிழுண்டு, தமிழர் உண்டு, தமிழுக்கு நாளும் செய்வோம் நல்ல தொண்டு' என்ற தொலைநோக்கு சிந்தனையுடன் செயல்பட்டு வரும் 'தினமலர்' நாளிதழின் பவள விழா; தினமலர் நிறுவனர் டி.வி.ராமசுப்பையர் 117ம் ஆண்டு பிறந்த நாள்; நாளை உலகை ஆளும் இன்றைய மழலையர்களின் அறிவுக்கண் திறக்கும் அரிச்சுவடி ஆரம்பம் என, முப்பெரும் விழா அக்., 2ம் தேதி பல பரிமாணங்களுடன் நடந்தது.
தமிழர் மரபு
பெங்களூரில் எந்த நாளிதழும் செய்யாத 'வித்யாரம்பம்' பல எதிர்பார்ப்புகளுடன் துவங்கியது. விழா நடந்த சிவாஜிநகர் காசி விஸ்வநாதேஸ்வரர் கோவில் வளாகத்தின் நுழைவு வாயிலில் கண் சிமிட்டும் பலுான்கள் அனைவரையும் வரவேற்றன.
வாசகர்களின் இதய சிம்மாசனத்தில் இடம் பிடித்த 'தினமலர்' நடத்தும் விழாவுக்கு வந்த தாய்மார்கள் பன்னீர் தெளித்து, மல்லிகைப்பூ, மஞ்சள், குங்குமம் வழங்கி தமிழர் மரபுடன் வரவேற்கப்பட்டனர்.
இத்திருவிழாவை வாசகர்கள், தங்கள் குடும்ப விழாவாக கருதி, முதியோரையும் குடும்பத்தினரையும் அழைத்து வந்திருந்தனர். நாதஸ்வரம் இன்னிசையுடன் கல்விக்குரிய சிறப்பு பூஜைகள் நடந்தபோது, வாசகர்கள் அனைவரும் பக்தியுடன் எழுந்து நின்று வணங்கியது, தமிழர் பாரம்பரியத்தை பறைசாற்றியது.
ஒன்றல்ல... இரண்டு... குத்துவிளக்கு ஏற்றி, தமிழ்த்தாய் பாடல், கன்னட மொழிப் பாடல் பாடப்பட்டதன் மூலம் தமிழர்- - கன்னடர் இணைந்து வாழும் ஒற்றுமையை எடுத்துக் காண்பித்தது.
ஆண்டு சந்தா
'தினமலர் வாசகர்களே... எங்கள் உறவுகளே... நீங்கள் இப்போதே ஆண்டு சந்தா உறுப்பினர் ஆகுங்களே' என்று அன்புடன் எடுத்துரைத்தது தொழிலின் மேன்மையை உணர்த்தியது.
மழலைச் செல்வங்களை நெல்மணியில் விரலி மஞ்சளால் 'அ'னா... 'ஆ'வன்னா எழுத வைத்தபோது, மகிழ்ச்சியில் திளைக்காத உள்ளங்கள் இல்லை எனலாம்.
'இன்றைய மழலையர் வருங்கால துாண்கள்' என வாயார வாழ்த்தி, 'நன்றாக படிக்க வேண்டும்' என்று மழலையை துாக்கி, கட்டியணைத்து பரவசப்படுத்தி, பிஞ்சு விரல் பிடித்து எழுத வைத்ததை, எழுச்சிமயமான நிகழ்வாக பார்க்கிறேன். நான் சிறுவயதில் 'சிறுவர் மலர்' படித்த நினைவுகள், என்னை கல்வியறிவில் சிறந்து விளங்க செய்தது' என, விழா சிறப்பு விருந்தினரான டாக்டர் ராம் பிரசாத் மனோகர் பெருமைப்பட கூறினார். 'இதை விட வேறு என்ன வேண்டும்' என பலரும் பெருமிதம் கொண்டனர்.
பெங்களூரின் அனைத்துபகுதிகளிலிருந்தும் தமிழ்க் குடும்பத்தினர் வந்திருந்தனர். இவ்விழா, தங்கள் குழந்தைகளின் எதிர்காலத்திற்காக அடித்தளமிடும் விழா என பெற்றோர்களின் சொல்லாக ஒலித்தது.
பிற மொழியினர்
தமிழர் அல்லாத பிற மொழியினரும் கூட விழா நடக்கும் விபரம் அறிந்து அரிச்சுவடி ஆரம்ப விழாவில் தங்கள் குழந்தைகளை அழைத்து வந்திருந்தனர். கல்வி கடவுளான சரஸ்வதிக்கு பூஜை செய்து, தங்கள் குழந்தைகளின் எழுத்தறிவை துவக்கிய தினமலருக்கு நன்றி என, தாங்கள் அறிந்த மொழியிலேயே கூறி மகிழ்ந்தனர்.
மொத்தத்தில் பெங்களுரு வித்யாரம்பம் விழாவில் பலரும் மனங்குளிர்ந்ததாக திளைத்தனர். அறிவுப்பட்டறைக்குள் கால்பதிக்க ஆயத்த மாகும் மழலையருடன் பெற்றோரும், அவர்களின் உற்றார், உறவினரும் தங்கள் குழந்தைகளின் வாழ்வில் இனிதான ஆரம்பம் என ஆராதித்தனர்.
- நமது நிருபர் -

