/
ஸ்பெஷல்
/
லைப் ஸ்டைல்
/
உணவு
/
குழந்தைகள் விரும்பும் கோதுமை அப்பம்
/
குழந்தைகள் விரும்பும் கோதுமை அப்பம்
ADDED : மே 16, 2025 10:01 PM

குழந்தைகளுக்கு மாலையில் எந்த விதமான 'ஸ்நாக்ஸ்' சமைத்து கொடுப்பது என்ற குழப்பம் பலருக்கும் இருக்கும். அந்த வரிசையில் இந்த வாரம் குழந்தைகள் கூட விரும்பி சாப்பிடும் சுவையான கோதுமை அப்பம் செய்யலாம்.
செய்முறை
முதலில் ஒரு கப் கோதுமை மாவு எடுத்து கொள்ளுங்கள். இந்த கோதுமை மாவுடன் கால் கப் அரிசி மாவு சேர்த்து கலந்து வைத்து கொள்ளுங்கள். பின் வாசனைக்காக அரை டேபிள் ஸ்பூன் ஏலக்காய் துாள் சேர்த்து கலந்து கொள்ளவும்.
அப்பம் நன்றாக உப்பி வருவதற்காக ஒரு சிட்டிகை சமையல் சோடா, உப்பு மற்றும் துருவிய தேங்காயை சேர்த்து கலக்கவும்
.
குறிப்பாக நாம் வீட்டில் எப்போதும் எந்த ஸ்வீட் வகை சமைத்தாலும் அதில் ஒரு சிட்டிகை உப்பு சேர்த்தால் தான் அதன் சுவையை துாக்கலாக இருக்கும். இதில் ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து கொள்ளவும்.
துருவிய தேங்காயை இதனுடன் சேர்த்து கலக்கவும். இதையடுத்து ஒரு பெரிய வாழைப்பழத்தை நன்கு கையால் பிசைந்து கூழாக்கி, இம்மாவில் சேர்த்து கிளறுங்கள்.
இதன் பின் அடுப்பில் ஒரு பாத்திரத்தில் ஒரு கப் தண்ணீர் ஊற்றி, அதில் பொடித்த வெல்லத்தை சேர்க்க வேண்டும். வெல்லம் கரையும் வரை கொதிக்க விடுங்கள். கரைந்ததும் அடுப்பை அணைத்து விட்டு, வெல்லப்பாகை சிறிது நேரம் ஆறவிடுங்கள்
சூடு ஆறிய பின், ஐந்து நிமிடம் கழித்து, நாம் தயார் செய்து வைத்துள்ள கோதுமை, அரிசி மாவு கலவையுடன், வெல்லப்பாகை சேர்க்க வேண்டும். அதன் பின், அப்ப மாவு பதத்தில் வருமாறு கொஞ்சம், கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி கலக்க வேண்டும்.
மாவு, அப்பம் சுடுவதற்கான சரியான பதத்தில் இருக்க வேண்டும். இல்லை என்றால், அப்பம் அதிகமாக எண்ணெய் குடித்து விடும் அல்லது எண்ணெயுடன் ஒட்டாமல் தனியாக பிரிந்து செல்லும் வாய்ப்பு உள்ளது.
பின் அடுப்பில் ஒரு சிறிய கடாய் வைத்து, தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடு செய்ய வேண்டும். எண்ணெய் நன்கு காய்ந்ததும், அடுப்பை மீடியம் ஸ்லோவில் வைக்கவும்.
நாம் தயார் செய்த அப்ப மாவை ஒரு குழி கரண்டியில் எடுத்து, எண்ணெயில் ஊற்றுங்கள். அப்பத்தின் ஒரு புறம் லேசாக வெந்து மேலே உப்பி வரும் போது, மறுபுறம் திருப்பி போடுங்கள். இது போன்று அப்பம் சுட்டு எடுத்துக் கொள்ளுங்கள்.
அவ்வளவு தான் குழந்தைகளுக்கு பிடித்த 'ஒரு ஈவினிங் ஸ்நாக்ஸ் ரெசிபி'யான சுவையான கோதுமை அப்பம் தயார்.
- நமது நிருபர் -