/
ஸ்பெஷல்
/
லைப் ஸ்டைல்
/
சுற்றுலா
/
குழந்தைகளை கவரும் பிராணி சரணாலயம்
/
குழந்தைகளை கவரும் பிராணி சரணாலயம்
ADDED : மே 28, 2025 11:08 PM

செல்ல பிராணிகளுடன் நேரத்தை செலவிடுதன் மூலம் மனிதர்களுக்கு மன அழுத்தம் குறையும்; தனிமையாக இருப்பது போன்ற உணர்வு போய் விடும்; மனநலம் மேம்பட்டு பல நன்மைகள் பெறலாம். செல்ல பிராணிகளுடன் விளையாடுவதன் மூலம் புத்துணர்ச்சி ஏற்படும் என்று மனநல நிபுணர்கள் கூறுகின்றனர். இதனால் பெரும்பாலான வீடுகளில் நாய், பூனை, கிளி, பறவையை செல்ல பிராணிகளாக வளர்க்கின்றனர். அவற்றை, தங்கள் குடும்பத்தில் ஒருவர் போன்றும் கருதுகின்றனர்.
இந்நிலையில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் கவரும் வகையில் செல்ல பிராணிகள் சரணாலயம் பெங்களூரில் உள்ளது. அதன் பெயர் பிராணி. இந்த சரணாலயம், பெங்களூரில் இருந்து கனகபுரா செல்லும் சாலையில் சோமனஹள்ளி என்ற இடத்தில் அமைந்து உள்ளது.
இங்கு ஈமு கோழி, உடும்பு, ஆமை, குதிரை, யானை, பல்வேறு வகையான கிளிகள், பறவைகள், ஆடுகள் உள்ளிட்ட செல்ல பிராணிகள் வளர்க்கப்பட்டு வருகின்றன. சரணாலயம் உள்ளே சென்றதும் கிளிகளுக்கு வழங்க ஒரு தட்டில் தானியம் கொடுக்கப்படும்.
அந்த தட்டில் உள்ள தானியங்களை சாப்பிட பறந்து வரும் கிளிகள் மனிதர்கள் கை, தலை மீது ஏறி அமர்ந்து கொள்கின்றன. இது புதிய அனுபவமாக இருக்கும். கிளிகள் நம்மை கொத்தி விடுமோ என்று பயம் ஏற்படலாம். ஆனால் அவைகள் தங்கள் மூக்கால், அன்பாக வருடி கொடுக்கும்.
செல்ல பிராணிகளுடன் குழந்தைகள் ஓடி, ஆடி விளையாடும் வாய்ப்பும் உள்ளது. செல்ல பிராணிகளை கையில் வைத்து விளையாடுவதால் குழந்தைகள் குதுாகலித்து விடுவர். கிளிகள், பறவைகள் கொஞ்சி மகிழ்வதை பார்ப்பதும் கண்கொள்ளா காட்சியாக இருக்கும்.
இந்த சரணாலயத்தை சுற்றி பார்க்க இரண்டு மணி நேரம் வரை ஆகிறது. சரணாலயத்தில் 700 க்கும் மேற்பட்ட பறவைகள், விலங்குகள் வசிப்பதாக சரணாலயத்தை பராமரிப்பவர்கள் கூறுகின்றனர். தினமும் காலை 9:00 மணி வரை மாலை 5:00 மணி வரை சரணாலயம் திறந்து இருக்கும். ஒரு நபருக்கு 400 ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. வாகனங்களை நிறுத்தும் வசதியும் உள்ளது
- நமது நிருபர் -.