/
ஸ்பெஷல்
/
லைப் ஸ்டைல்
/
சுற்றுலா
/
பைக்கர்ஸ்களின் சாகச கூடாரம் டி.டி., ஹில்ஸ்
/
பைக்கர்ஸ்களின் சாகச கூடாரம் டி.டி., ஹில்ஸ்
ADDED : ஜூன் 04, 2025 11:31 PM

பைக் ரைடர்ஸ்களுக்கான பக்காவான ஒரு டூரிஸ்ட் ஸ்பாட் தான் 'டி.டி., ஹில்ஸ்'. இந்த பெயரை கேட்டவுடன் ஏதோ சினிமா பெயர் என நினைக்க வேண்டாம். உண்மையில் இது சினிமாவையே மிஞ்சும் அதிசயம், சாகசங்கள் நிறைந்த மலை. சாகசத்திற்கு பஞ்சமில்லாத மலையை பற்றி சாமார்த்தியமாக எடுத்துரைக்கிறது இக்கட்டுரை.
மேகக்கூட்டம்
பெங்ளூரில் இருந்து 70 கி.மீ., துாரத்தில் உள்ளது டி.டி., ஹில்ஸ் எனும் தேவராயனதுர்கா மலை. தரையிலிருந்து 4,000 அடி உயரத்தில் உள்ளது. பெங்களூரில் வசிப்போரின் வார இறுதிநாட்கள் சுற்றுலாவுக்கு சரியான தேர்வாக இருக்கும்.
அனைத்து மாதங்களிலும் வரலாம். இருப்பினும், பனி மாதங்களில் வரும் போது, மலை உச்சியில் இருந்து பார்க்கும் போது, பனி மூட்டம், மேகங்களுடன் சேர்ந்து காணப்படும் விசித்திரமான காட்சியை, சலிக்கும் வரை பார்க்கலாம். அப்போது, நம் மனம் நம்மை அறியாமல் அந்த மேகக்கூட்டங்களுடன் செல்லும்.
குரங்குகள் அட்டகாசம்
இங்கு வருவோர், கட்டாயம் சாப்பிடுவதற்கு தின்பண்டங்கள், சாப்பாடு, குடிநீர் ஆகியவற்றை வாங்கி வருவது அவசியம். ஏனெனில், இங்கு கடைகள் வெகு துாரத்தில் உள்ளன. அதுமட்டுமின்றி, இந்த மலையின் மீது உள்ள குரங்குகள், உணவுகளை பறித்து சாப்பிடும் பழக்கம் உடையவை. எனவே, அவற்றிடம் தேவையில்லாத சில்மிஷங்களில் ஈடுபடுவதை தவிர்ப்பது நல்லது.
பைக்குக்கு 10 ரூபாய்
இப்படி பல சுவாரசியங்கள் உள்ள மலையின் உச்சியை அடைய உருவாக்கப்பட்டுள்ள சாலைகள் நல்ல நிலையில் உள்ளன. இதன் காரணமாகவே, பல பைக்கர்ஸ்கள் வருகை தருகின்றனர். பைக்கில் வருபவர் கட்டாயம் ஹெல்மெட் அணிந்து வரவும். அதுமட்டுமின்றி வேகமாக செல்வதை தவிர்க்கவும்.
ஏனெனில், குரங்குகள் சாலையிலே சுற்றித்திரிகிறது. விபத்து நேராமல் இருக்க வேகத்தை தவிர்க்கவும். மலையேறுவதற்கு பைக்குக்கு 10 ரூபாயும்; காருக்கு 30 ரூபாயும் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.
இங்கு அனுபவம் வாய்ந்த புதிய பைக்கர்கள் யாவரும் வரலாம். மலையின் உச்சியில் யோக நரசிம்மர் கோவில் உள்ளது. அதே போல, மலை ஏறுவதற்கு முன்பு மலையின் அடிவாரத்தில் போகநரசிம்மரை தரிசிக்கலாம்.
வரலாறு
இந்த கோவிலில் ஆண்டுதோறும் பிரம்மோத்சவ விழா பிரம்மாண்டமாக நடக்கும். கோவில் முழுவதும் அலங்கரிக்கப்படும்; கலாச்சார விழாக்கள் நடக்கும். இந்த இருவரையும் வணங்கிவிட்டு சென்றால், விபத்துகள் ஏதும் நடக்காமல் பயணம் சுமூகமாக முடியும் என பலரும் கருதுகின்றனர்.
இந்த மலைப்பகுதியை, மைசூரை ஆட்சி செய்த சிக்க தேவராஜ உடையார் ஆட்சி செய்தார். இதை குறிக்கும் விதமாக இந்த மலை தேவராயரின் கோட்டை என அழைக்கப்படுகிறது. இப்படி இந்த மலைக்கு ஒரு நீண்ட வரலாறு உள்ளது.
இப்படி வரலாற்று சிறப்புமிக்க மலையில் பயணம் செய்து, புகைப்படங்கள் எடுத்து, மலரும் நினைவாக வைத்து கொள்ளலாம். மலை மீது உள்ள சிறிய குளத்தில் குளிப்பதற்கு அனுமதி உண்டு.
இப்படி ஒரு நாளை பயனுள்ள வகையில் செலவிட வேண்டும் என்றால், நீங்கள் செல்ல வேண்டிய இடம் 'டி.டி., ஹில்சாக' இருக்கும் என்பதில் எந்த மாற்றமும் இல்லை. இந்த இடம் பைக்கர்ஸ்களின் பிடித்தமான இடமாக இருந்தாலும், முதியவர்கள் சிலர் யோக நரசிம்மர், போக நரசிம்மர் கோவில்களை தரிசிக்கலாம்.
- நமது நிருபர் -