பொள்ளாச்சி பெருமாள் கோவில்களில் விஷ்ணுபதி புண்யகால பூஜை
பொள்ளாச்சி: பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்பகுதிகளில் உள்ள பெருமாள் கோவிலில், விஷ்ணுபதி புண்யகால பூஜை நாளை, 15ம் தேதி நடக்கிறது.
விஷ்ணுபதி புண்யா காலத்தில், பெருமாள் கோவிலுக்கு சென்று கொடிமர நமஸ்காரம் செய்து, 27 பூக்களை கையில் வைத்துக்கொண்டு, 27 முறை பிரகாரத்தை வலம் வந்து ஒவ்வொரு சுற்றுக்கும், ஒரு பூவை கொடி மரத்துக்கு வைக்க வேண்டும். இந்த புண்ய காலத்தில் மஹாவிஷ்ணுவையும், மஹாலட்சுமியையும் மனதார வழிபட்டு எல்லா தேவைகளையும், வேண்டுதல்களையும் கூறி பிரார்த்தனை செய்யலாம். பூமிக்கு அதிபதியான பூதேவி தாயாரை அந்த நாளில் நடக்கும் மகா பூஜையில் பங்கேற்று வழிபட்டால் நிலம், வீடு வாங்க தாயாரின் அருள் பெற முடியும் என்பது ஐதீகம். பொள்ளாச்சி கடைவீதி ஸ்ரீதேவி, பூதேவி சமேத கரிவரதராஜப்பெருமாள் கோவிலில், மஹா விஷ்ணு புண்ணிய கால பூஜை நாளை, 15ம் தேதி நடக்கிறது. அதில், அதிகாலை, 2:30 மணிக்கு பெருமாளுக்கு அபிேஷகம், அலங்கார பூஜைகள் நடைபெறுகின்றன. தொடர்ந்து, காலை, 5:00 மணிக்கு சிறப்பு ேஹாமங்கள் நடக்கிறது. டி. கோட்டாம்பட்டி ஸ்ரீ தேவி, பூதேவி சமேத வரதராஜப்பெருமாள் கோவிலில், விஷ்ணுபதி புண்ணிய காலத்தையொட்டி சிறப்பு பூஜைகள் நடக்கிறது. காலை,4:30 மணியில் இருந்து மதியம், 12:00 மணி வரையிலும், மாலை, 5:00 மணி முதல், இரவு, 7:40 மணி வரையிலும் பிரகாரத்தை வலம் வரலாம் என கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.