உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் /  உலகிற்கான மிகப்பெரிய ஆன்மிக துாதர் ரவிசங்கர் குருஜி மஹாராஷ்டிரா முதல்வர் பட்னவிஸ் புகழாரம்

 உலகிற்கான மிகப்பெரிய ஆன்மிக துாதர் ரவிசங்கர் குருஜி மஹாராஷ்டிரா முதல்வர் பட்னவிஸ் புகழாரம்

  பெங்களூரு: ‘‘ரவிசங்கர் குருஜி, உலகிற்கான இந்தியாவின் மிகப்பெரிய ஆன்மிக துாதர்,’’ என, மஹாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் புகழாரம் சூட்டினார்.

கர்நாடக மாநிலம், பெங்களூரில் உள்ள சர்வதேச வாழும் கலை மையத்தில், அதன் 45வது ஆண்டு விழா, ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் குருஜியின் 70வது பிறந்த நாள் கொண்டாட்டம் தொடர்பான நிகழ்ச்சிகள் தினமும் நடந்து வருகிறது.

‘உலக அமைதிக்காக குருதேவுடன் இணைந்து உலகம் தியானிக்கிறது’ என்ற பெயரில், புதிதாக கட்டப்பட்டு உள்ள தியான மண்டபத்திற்கு தினமும் சிறப்பு விருந்தினர்கள் வருகின்றனர். சிறப்பு விருந்தினர்கள் இதன்படி, இன்று மஹாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்னவிஸ், ஹரியானா கவர்னர் ஆஷிம் குமார் கோஷ், ஆர்.எஸ்.எஸ்., பொது செயலர் தத்தாத்ரேய ஹொசபலே, ஐந்து முறை தேசிய மகளிர் ஹெவி வெயிட் சாம்பியன் பட்டம் வென்ற நுபுர் ஷியோரன், இளைஞர் விவகாரம், விளையாட்டு துறை மத்திய இணை அமைச்சர் ரக் ஷா கட்சே, எம்.பி.,க்கள், அமைச்சர்கள், கலைஞர்கள், தொழில் முனைவோர் என ஏராளமானோர் ஆசிரமத்துக்கு வந்தனர்.

இதில், தேவேந்திர பட்னவிஸ் பேசியதாவது: ரவிசங்கர் குருஜி, உலகிற்கான இந்தியாவின் மிகப்பெரிய ஆன்மிக துாதர். ஒரு விஸ்வகுருவாக இந்தியா குறித்த நமது பார்வை, வெறும் பொருளாதாரம் அல்லது ராணுவ பலத்தில் மட்டும் வேரூன்றியதல்ல. மாறாக ஆன்மிக சக்தியில் வேரூன்றி உள்ளது. ஆன்மிக வல்லரசாக நாம் மாறுவதற்கான பாதைக்கு, ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் குருஜி வழிகாட்டுகிறார்.

நமது ஆன்மிக சிந்தனையையும், நமது உலகளாவிய அறிவையும், நமது முழுமையான ஞானத்தையும் உலகிற்கு முன்வைத்து, உலகின் கவனத்தை நம் பக்கம் ஈர்க்க உழைத்துள்ளார்.  எங்கெல்லாம் துயரம், பேரழிவு ஏற்படுகிறதோ, அங்கெல்லாம் குருஜியின் சொல்லுக்கு கட்டுப்பட்டு, இம்மையத்தின் தன்னார்வலர்கள் மிகுந்த ஒழுக்கத்துடன் பணியாற்றுகின்றனர். இவ்வாறு அவர் பேசினார். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !