உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / குருவாயூர் கோவிலில் புதுப்பொலிவுடன் திறக்கப்படுகிறது ‘கவுஸ்துபம்’ தங்கும் விடுதி

குருவாயூர் கோவிலில் புதுப்பொலிவுடன் திறக்கப்படுகிறது ‘கவுஸ்துபம்’ தங்கும் விடுதி

பாலக்காடு: குருவாயூர் ஸ்ரீகிருஷ்ணர் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்குக் குறைந்த செலவில் தங்குமிட வசதியை வழங்கும் நோக்கில், புனரமைக்கப்பட்ட ‘கவுஸ்துபம்’ தங்கும் விடுதி விரைவில் திறக்கப்பட உள்ளது. நவீன வசதிகளுடன் கூடிய 100 அறைகளுடன் தயாராகியுள்ள இவ்விடுதியை, இந்த மாதமே பொதுமக்களின் பயன்பாட்டிற்குக் கொண்டுவர தேவஸ்வம் நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.


ரூ. 13 கோடியில் நவீன புனரமைப்பு: கடந்த இரண்டு ஆண்டுகளாகப் புனரமைப்புப் பணிகளுக்காக மூடப்பட்டிருந்த கவுஸ்துபம் விடுதி, தற்போது முற்றிலும் புதிய தோற்றத்தில் காட்சியளிக்கிறது. சுமார் 5,500 சதுர அடி பரப்பளவில், ஐந்து அடுக்குகளைக் கொண்ட இந்தத் தங்கும் விடுதி, 13 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதுப்பிக்கப்பட்டுள்ளது. இதில் பக்தர்களின் வசதிக்காகப் பல்வேறு பிரிவுகளில் அறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. 2, 3, 4 மற்றும் 6 படுக்கைகள் கொண்ட அறைகள் உள்ளன. மொத்தமுள்ள அறைகளில், இரண்டு படுக்கைகள் கொண்ட 22 அறைகளும், மூன்று படுக்கைகள் கொண்ட ஒரு அறையும் குளிர்சாதன (AC) வசதி கொண்டவை. மற்றவை அனைத்தும் சாதாரண அறைகளாகும். முன்னதாக, இரண்டு படுக்கைகள் கொண்ட அறைக்கு 350 ரூபாய் மட்டுமே வாடகையாக வசூலிக்கப்பட்டது. தற்போது கூடுதல் நவீன வசதிகள் செய்யப்பட்டுள்ளதால், வாடகை சற்று உயர்த்தப்பட வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.


இது குறித்து கோவில நிர்வாக அதிகாரி அருண்குமார் கூறுகையில்: அடுத்த கோவில் நிர்வாகக் குழுக் கூட்டத்தில் ஆலோசித்த பிறகே புதிய வாடகை விகிதங்கள் இறுதி செய்யப்பட்டு அறிவிக்கப்படும். முன்பதிவு முறையை முழுமையாக ஆன்லைன் மயமாக்க நிர்வாகம் முடிவு செய்துள்ளது. குருவாயூர் தேவசத்தின் கீழ் இயங்கும் ஸ்ரீவத்ஸம், பாஞ்சஜன்யம், பாஞ்சஜன்யம் அனெக்ஸ் மற்றும் கவுஸ்துபம் ஆகிய நான்கு விடுதிகளிலும் ஆன்லைன் மூலம் அறைகளை முன்பதிவு செய்யலாம். ஸ்ரீவத்ஸம் விடுதியைத் தவிர மற்ற விடுதிகளில் குறைந்த வாடகையில் தங்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. ஆன்லைன் தவிர, அறைகள் காலியாக இருக்கும் பட்சத்தில் பக்தர்கள் நேரடியாகவும் அறைகளைப் பெற்றுக் கொள்ளலாம். கடந்த இரண்டு ஆண்டுகளாக கவுஸ்துபம் விடுதி செயல்படாததால், விசேஷ நாட்களில் பக்தர்கள் தங்குவதற்கு இடம் கிடைக்காமல் பெரும் சிரமத்திற்குள்ளாகினர். தற்போது இந்த விடுதி திறக்கப்படுவதன் மூலம், குருவாயூரில் நிலவி வரும் தங்கும் விடுதி தட்டுப்பாடு பிரச்சனைக்கு நிரந்தரத் தீர்வு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !