பாலக்காடு கல்லேகுளங்கரை கதகளி கிராம ஆண்டு விழா கோலாகலம்
பாலக்காடு ; பாலக்காடு கல்லேகுளங்கரை கதகளி கிராமத்தின் ஆண்டு விழா வெகு விமர்சியாக நடந்து வருகிறது.
மூன்று நாட்களாக நடக்கும் விழாவின் முதல் நாளான நேற்று முன்தினம் கல்லேகுளங்கரை ஏமூர் பகவதி அம்மன் கோவில் சப்தாக மண்டபத்தில் கோலாகலமாகத் தொடங்கியது.
கதகளி உலகின் மாபெரும் கலைஞரான கலாமண்டலம் டாக்டர் ராமன்குட்டி நாயரின் 101-வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு, அவரது உருவப்படத்திற்கு முன்பாக கதகளி கிராமத்து மாணவர்களும் கலை ரசிகர்களும் இணைந்து 101 விளக்குகளை ஏற்றி தங்களது அஞ்சலியைச் செலுத்தினர்.இதனைத் தொடர்ந்து, கதகளி கிராம மாணவர்களின் நவகதகளி குருஸ்மரணகீதம் என்ற பாடி ஆடும் (சொல்லியாட்டம்) நிகழ்ச்சி அரங்கேறியது. மேலும், கதகளி கலையின் பாரம்பரிய பாணிகளான கல்லடிக்கோடன், கப்ளிங்காடான் மற்றும் கல்லுவழி ஆகிய நெறிகளில் அமைந்த தோடயத்ரயம் மேடையேற்றப்பட்டது.தொடர்ந்து நடைபெற்ற கதகளியின் தோடய பாணிகள் குறித்த கருத்தரங்கிற்கு விஜயகிருஷ்ணன் நெறியாளராகச் செயல்பட்டார். இதில் கலாமண்டலம் பிரசாந்த், கலாமண்டலம் ரவிகுமார், கலாமண்டலம் அருண் வாரியர் மற்றும் அனூப் வெள்ளானி ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினர். நேற்று காலை 8 மணிக்கு செம்பை நினைவு சங்கீதக் கல்லூரியில் புறப்பாடு நிகழ்ச்சியுடன் விழா தொடங்குகிறது. அதனைத் தொடர்ந்து சுபத்ராஹரணம், கல்யாணசௌகந்திகம், ராஜசூயம்,நரகாசுரவதம், சீதாசுயம்வரம்,பாலிவிஜயம்,தக்ஷயாகம்
ஆகிய புகழ்பெற்ற 7 கதகளி கதைகள் மேடையேறியது. இந்நிகழ்ச்சியில் 9 வயது சிறுமி முதல் 61 வயது மூதாட்டி வரையிலான பல்வேறு வயதுடைய பெண்கள் கதகளி வேடமேற்று நடித்து இந்த ஆண்டு விழாவின் தனிச்சிறப்பாகும். நாளை காலை 9.30 மணிக்கு நடைபெறும் நிறைவு விழாவை எம்.பி. ஸ்ரீகண்டன் தொடங்கி வைத்து உரையாற்றுகிறார். இவ்விழாவில் எம்.எல்.ஏ. பிரபாகரன் , மாவட்ட கலெக்டர் மாதவிக்குட்டி மற்றும் புகழ்பெற்ற கலைஞர் கலாமண்டலம் சிவன் நம்பூதிரி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகப் பங்கேற்கின்றனர். விழாவின் இறுதி நிகழ்வாக தேவி மகாத்மியம் கதகளி அரங்கேற்றத்துடன் இந்த ஆண்டு விழா நிறைவடைகிறது.