ஈஸ்வரன் கோவில் தேர்த்திருவிழா பஞ்சமூர்த்திகள் புறப்பாடு
திருப்பூர்: வைகாசி விசாக தேர்த்திருவிழாவை முன்னிட்டு, ஸ்ரீவிஸ்வேஸ்வர சுவாமி கோவிலில் நாளை, பஞ்சமூர்த்திகள் புறப்பாடு நடைபெற உள்ளது.
திருப்பூர் ஸ்ரீவிஸ்வேஸ்வர சுவாமி, ஸ்ரீவீரராகவப்பெருமாள் கோவில் தேர்த்திருவிழா, கடந்த, 24ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. மூன்றாவது நாளான நேற்று, சிறப்பு அபிேஷகம் மற்றும் அலங்கார பூஜைகள் நடந்தது. ஆனந்தவல்லி சமேத ஸ்ரீசந்திரசேகரர் மற்றும் அன்னபட்சி வாகனத்தில் ஸ்ரீதேவி பூதேவி சமேத வீரராகவப்பெருமாள் திருவீதியுலா வந்து அருள்பாலித்தனர்.
மாலையில், சிறப்பு அலங்காரத்துடன் சோமாஸ்கந்தர் ராவணேஸ்வரர் வாகனத்திலும், விசாலாட்சி அம்மன் காமதேனு வாகனத்திலும் எழுந்தருளினர். நம்பெருமாள், ேஷச வாகனத்தில் எழுந்தளினார். தேர்வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். பெருமாள் கோவில் மேடையில், காயத்ரி ராமராஜ் குழுவினரின் பக்தி இன்னிசை நிகழ்ச்சி நடந்தது.
ஸ்ரீவிஸ்வேஸ்வர சுவாமி கோவிலில், 63 நாயன்மார்களுக்கு காட்சியருளும், பஞ்சமூர்த்திகள் புறப்பாடு நாளை மாலை, 6:30 மணிக்கு நடக்கிறது.
வரும், 29ல் திருக்கல்யாண உற்சவமும், 30ல் விஸ்வேஸ்வரர் தேரோட்டமும், 31ல் வீரராகவப்பெருமாள் தேரோட்டமும் நடக்க உள்ளது. தேரோட்டத்தை முன்னிட்டு, இன்று காலை, 9:00 மணிக்கு, இரு தேர்களுக்கும் கலசம் பொருத்தும் நிகழ்ச்சியும், அதனை தொடர்ந்து தேர் அலங்கார பணிகளும் துவங்க உள்ளது.