உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சாலவாக்கத்தில் பராமரிப்பின்றி பாசி படர்ந்த தீர்த்தக்குளம்

சாலவாக்கத்தில் பராமரிப்பின்றி பாசி படர்ந்த தீர்த்தக்குளம்

உத்திரமேரூர்: சாலவாக்கம் தீர்த்தக்குளம் பராமரிப்பு இல்லாததால் துார்ந்து, பாசி படர்ந்து தண்ணீர் மாசடைந்து பயன்பாடற்ற நிலையில் உள்ளது.

உத்திரமேரூர் ஒன்றியம், சாலவாக்கத்தில், ஹிந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டிலான சொர்ணபுரீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலுக்கு அருகாமையில் 1 ஏக்கர் பரப்பில், ஊராட்சிக்கு சொந்தமான பொதுக்குளம் உள்ளது. இக்குளத்தங்கரையை சுற்றிலும் திரவுபதியம்மன் கோவில், துலுக்கானத்தம்மன் கோவில், நாகாத்தம்மன் கோவில், வாழ்வாத்தம்மன், மாரியம்மன் மற்றும் கெங்கையம்மன் ஆகிய கோவில்கள் உள்ளன. குளத்தங்கரையை சுற்றிலும் கோவில்கள் உள்ளதால் இக்குளம் தீர்த்தக்குளம் என பெயர் பெற்றதாக கூறப்படுகிறது. 20 ஆண்டுகளுக்கு முன் வரை, சாலவாக்கத்திற்கு குடிநீர் ஆதாரமாக விளங்கிய இக்குளம், பாலாற்று குடிநீர் திட்டத்திற்கு பின் கவனிப்பார் இல்லாத நிலையில் உள்ளது.

அப்பகுதி மக்கள் கூறியதாவது: சாலவாக்கத்தில் உள்ள தீர்த்தக்குளத்தங்கரையை சுற்றிலும் உள்ள கோவில்களுக்கு, விழா காலங்களில் இந்த குளத்தில்தான் புனித நீர் எடுத்து பூஜை செய்யப்படும். பல ஆண்டுகளாக இக்குளம் துார்வாராமலும், குளத்து நீர் பயன்பாடின்றியும் உள்ளதால் தற்போது தண்ணீர் பாசி படர்ந்து மாசடைந்துள்ளது.  எனவே, இக்குளத்தை துார்வாரி பராமரிப்பு பணி மேற்கொள்ள சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்,இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !