உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருச்சியில் முதல்வர் விஜய்க்கு சிலை வைத்து வழிபாடு

திருச்சியில் முதல்வர் விஜய்க்கு சிலை வைத்து வழிபாடு

திருச்சி; திருச்சியில், த.வெ.க., தொண்டர் ஒருவர், வீட்டில் முதல்வர் விஜய்க்கு சிலை வைத்து, பூஜை செய்கிறார்.

திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் சட்டசபை தொகுதியைச் சேர்ந்த சுகுமார், 32, என்பவர் 20 ஆண்டுகளுக்கு மேலாக விஜய் ரசிகராகவும், விஜய் மக்கள் இயக்கத்திலும் இருந்தார். விஜய் கட்சி ஆரம்பித்த பின், முழுதுமாக த.வெ.க.,வில் இணைத்துக் கொண்டு பணியாற்றி வருகிறார். தமிழக சட்டசபை தேர்தலில், த.வெ.க., வெற்றி பெற்று, விஜய் முதல்வராகி உள்ள நிலையில், சுகுமார் என்ற த.வெ.க., தொண்டர் தனது வீட்டில், விஜயின் உருவச்சிலையை பூஜை அறையில் வைத்து, பூஜை செய்து வழிபாடு மேற்கொண்டு வருகிறார்.

இது குறித்து சுகுமார் கூறியதாவது: விஜய் முதல்வரான பிறகு தான், மக்கள் அனைவரும் அவரை கொண்டாட தொடங்கி உள்ளனர். ஆனால், இருபது ஆண்டுகளுக்கு முன்பே ரசிகராக இருந்து, அவரை கொண்டாடி வருவதால், ஓராண்டுக்கு முன்பே, வீட்டில் விஜய் சிலையை வைத்து வழிபாடு செய்து வருகிறேன். திருவெறும்பூர் தொகுதி வேட்பாளராக போட்டியிட்ட நவல்பட்டு விஜயகுமார் தேர்தல் பிரசாரத்தின் போது, அதே போன்ற விஜய் உருவச்சிலையை தான் பயன்படுத்தினார். கடவுள் மக்களுக்கு நன்மைகள் செய்வது போல், தமிழக முதல்வரும் மக்களுக்கு நன்மைகள் செய்ய வேண்டும்; செய்வார். இவ்வாறு அவர் தெரிவித்தார். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !