சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் தீர்த்தவாரி உற்ஸவம்
சோழவந்தான்: சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோயில் வைகாசி திருவிழா தீர்த்தவாரி உற்ஸவத்துடன் நிறைவடைந்தது. மே 18ல் கொடியேற்றத்துடன் விழா தொடங்கியது.
மே 26 தீச்சட்டி, பால்குடம் மே 27 பூக்குழி, ஜூன் 2 தேரோட்டம் நடந்தது. நேற்று மாலை கொடியிறக்கப்பட்டு மஞ்சள் நீராட்டுடன் அம்மன் வைகையாற்றுக்குச் சென்றார். இரவு சிறப்பு அலங்காரம் செய்து பூஜைகள் நடந்தன. அலங்கரிக்கப்பட்ட மலர் ஊஞ்சலில் அம்மன் ஆடுவதை ஏராளமான பக்தர்கள் தரிசித்தனர்.
பொதுமக்கள் முகம்சுளிப்பு டி.எஸ்.பி., ஆனந்தராஜ் தலைமையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. அம்மன் ஊஞ்சலாடுவதற்காக குவித்து வைக்கப்பட்டிருந்த மண் மேடையில் பூஜைகள் முடிந்தும் தனி நபர்கள் பலர் நின்று கொண்டும், அமர்ந்தும் இருந்ததால் சுற்றி இருந்தவர்களுக்கு அம்மன் ஊஞ்சலாடுவது தெரியாமல் நெரிசல் ஏற்பட்டது.
மேலும் அவர்கள் செய்தியாளர்களை போட்டோ எடுக்க விடாமல் வாக்குவாதத்திலும் ஈடுபட்டனர். இதனால் பொதுமக்கள் முகம் சுளித்தனர்.
அடுத்த ஆண்டு பூஜாரி, நிர்வாகம் சார்ந்தவர்களை தவிர மற்ற யாரையும் அனுமதிக்க கூடாது என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். நிர்வாக அலுவலர் ராஜா, கோயில் பணியாளர்கள் ஏற்பாடுகளை செய்தனர்.