ரிஷிவந்தியம் கூத்தாண்டவர் கோவில் தேர்திருவிழா
ரிஷிவந்தியம்: முட்டியம் கிராமத்தில் கூத்தாண்டவர் கோவில் தேர்திருவிழா நடந்தது.
ரிஷிவந்தியம் அடுத்த முட்டியம் கிராமத்தில் உள்ள கூத்தாண்டவர் கோவிலில் ஆண்டுதோறும வைகாசி மாதம் தேர்திருவிழா நடைபெறுவது வழக்கம். அதேபோல், நடப்பாண்டிற்கான தேர்திருவிழா கடந்த 2ம் தேதி சக்தி அழைத்து, காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. தொடர்ந்து 7 நாட்கள் தினமும் கூத்தாண்டவர் சுவாமிக்கு சிறப்பு பூஜைகளும், இரவு சுவாமி வீதியுலாவும் நடந்தது. நேற்று திருநங்கைகள் தாலி கட்டுக்கொள்ளும் நிகழ்ச்சியும், சுவாமிக்கு கண் திறப்பு நிகழ்ச்சியும் நடந்தது.
தேர்திருவிழாவையொட்டி இன்று அதிகாலை சுவாமி வீதியுலாவும், பொங்கல் வைக்கும் நிகழ்ச்சி நடந்தன. தொடர்ந்து, 25 அடி உயரமுள்ள தேரில் கூத்தாண்டவர் சுவாமியின் சிரசினை ஏற்றிய பிறகு தேரோட்டம் தொடங்கியது. சுற்று வட்டார பல்வேறு கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் தேரினை வடம் பிடித்து இழுத்து சென்றனர். திருநங்கைகள் தேருக்கு முன் நடனமாடினர். தேர் காளி கோவிலுக்கு வந்தடைந்த பிறகு நடந்த களபலி இடுதல் நிகழ்ச்சியில் திருநங்கைகள் தங்களது தாலி அறுத்துக்கொண்டனர். தொடர்ந்து, குழந்தையில்லாத தம்பதிகளுக்கு சிறப்பு பிரசாதம் வழங்கப்பட்டது. திருவிழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர், ஊர்பொதுமக்கள் செய்திருந்தனர்.