திருத்தணி முருகன் மலைக்கோவிலில் காத்திருந்து பக்தர்கள் தரிசனம்
திருத்தணி: திருத்தணி முருகன் மலைக்கோவிலில், வார விடுமுறையான நேற்று, பல்லாயிரக்கணக்கில் திரண்ட பக்தர்கள், இரண்டு மணி நேரம் காத்திருந்து, மூலவரை தரிசனம் செய்தனர்.
திருத்தணி முருகன் மலைக்கோவிலுக்கு, தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்களில் இருந்து, தினசரி ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து, மூலவரை தரிசித்து செல்கின்றனர். இந்நிலையில், நேற்று வார விடுமுறையான ஞாயிற்றுக்கிழமை என்பதால், வழக்கத்திற்கு மாறாக, பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் காலை முதலே மலைக்கோவிலில் திரண்டனர்.இதனால், பொது வழியில் மூலவரை தரிசிக்க, இரண்டு மணி நேரத்திற்கும் மேல், கொளுத்தும் வெயிலில் நீண்ட வரிசை யில் காத்திருந்தனர். அதே போல், 100 ரூபாய் சிறப்பு தரிசன டிக்கெட் பெற்ற பக்தர்கள், ஒரு மணி நேரத்திற்கும் மேல் வரிசையில் காத்திருந்து, மூலவரை வழிபட்டனர். நேற்று, இருசக்கர வாகனங்கள், கார்களுக்கு மட்டுமே மலைப்பாதையில் அனுமதி அளிக்கப்பட்டது. பக்தர்கள் நலன் கருதி, கோவில் நிர்வாகம் சார்பில், 10 பேருந்துகள் மலைக்கோவிலுக்கு இயக்கப்பட்டன. முன்னதாக, நேற்று அதிகாலை 5:00 மணிக்கு, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், தங்க வேல், தங்க கிரீடம் மற்றும் வைர ஆபரணங்கள் அணிவித்து, சிறப்பு தீபாராதனை நடந்தது. திருத்தணி ஏ.எஸ்.பி., ஷுபன் திமான் தலைமையில், 15க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.