சிதம்பரம் நடராஜர் கோவிலில் மாட்டு வண்டி வாகனத்தில் ஹஸ்தரராஜர் வீதியுலா
சிதம்பரம்: சிதம்பரம் நடராஜர் கோவில் விழாவின்போது, பஞ்சமூர்த்திகள் வீதியுலாவிற்கு முன்பாக நடராஜர் பிரதிநிதியாக செல்லும், ஹஸ்தரராஜர், கடும் வெயில் காரணமாக மாட்டு வண்டியில் வீதியுலாவாக எடுத்து செல்லப்பட்டார்.
சிதம்பரம் நடராஜர் கோவிலில் தரிசன விழாக்களின்போது, 10 நாட்கள் நடைபெறும் உற்சவத்தின்போது, தினமும் காலை பஞ்சமூர்த்திகள் வீதியுலா நடைபெறு வழக்கம். பல்வேறு வாகனங்களில், நான்கு வீதிகளிலும் வீதியுலா வரும்போது, அதற்கு முன்பாக நடராஜரின் பிரதிநிதியாக, ஹஸ்தரராஜர் முதலில் செல்வது வழக்கம். கோவில் பொது தீட்சிதர்கள் ஹஸ்தரராஜரை கையில் துாக்கிக்கொண்டு செல்வார்கள். இந்நிலையில், தற்போது, சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆனி திருமஞ்சன விழா நடந்துவரும் நிலையில், கடும் வெயில் காரணமாக, சாலையில் ஹஸ்தரராஜரை துாக்கி செல்ல இயலாத நிலையில், ஹஸ்தரராஜர் செல்ல, மாட்டு வண்டி வாகனம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நேற்று நடந்த பஞ்சமூர்த்திகள் வீதியுலாவுக்கு முன்பாக, மாட்டு வண்டியில் ஹஸ்தரராஜர் வீதியுலா சென்றார்.