உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஆழ்ந்த பக்தி இருந்தால் எத்தகைய துன்பத்தையும் சமாளிக்கலாம் நித்யதீபானந்த சுவாமி அறிவுரை

ஆழ்ந்த பக்தி இருந்தால் எத்தகைய துன்பத்தையும் சமாளிக்கலாம் நித்யதீபானந்த சுவாமி அறிவுரை

மதுரை: "கடவுள் மீது ஆழ்ந்த பக்தி இருந்தால், வாழ்வில் எவ்வளவு துன்பங்கள் வந்தாலும் சமாளித்து விடலாம். பக்தி மட்டுமே அதற்கான பக்குவத்தை நமக்கு தரும்" என நித்யதீபானந்த சுவாமி மதுரையில் நடந்த மாணிக்க வாசகர் குருபூஜை விழாவில் பேசினார்.

மதுரையில் திருவிளையாடல் புராண ஆராய்ச்சி மையம் சார்பில் மாணிக்கவாசகர் குருபூஜை விழா நடந்தது. மதுரைக் கல்லுாரி உதவிப்பேராசிரியர் அரவிந்த் பிரகாஷ் வரவேற்றார். மையத் தலைவர் சந்திரசேகரன் முன்னிலை வகித்தார்.

ராமகிருஷ்ண மடத்தின் தலைவர் நித்யதீபானந்த சுவாமி பேசியதாவது:

தமிழில் பெரியபுராணம், கந்த புராணம், திருவிளையாடல்புராணம் முக்கிய புராணங்களாக கருதப்படுகின்றன. பரஞ்சோதி முனிவர் செவிவழிச் செய்திகளை தொகுத்து, திருவிளையாடல் புராணமாக வெளியிட்டார். இதன் மூலம் அக்கால மக்களின் வாழ்க்கை முறை, கலைகள், ஐதீகங்கள் தெரியவருகிறது.

பெரிய புராணம் சிவனடியார்கள், நாயன்மார்களின் வரலாற்றை விரிவாக பேசுகிறது. இதில் பக்தி மட்டுமே சிறப்பானது என்பது வலியுறுத்தப்பட்டுள்ளது. கடவுள் மீது ஆழ்ந்த பக்தி இருந்தால், வாழ்வில் எவ்வளவு துன்பங்கள் வந்தாலும் சமாளித்து விடலாம். நாம் ஆழ்ந்த பக்தியில் ஈடுபடும்போது மட்டுமே இந்த வாழ்க்கை என்பது கடவுளின் திருவிளையாடல் என புரியும். அப்போது எந்த கஷ்டம் வந்தாலும், ஏற்கும் மனப்பக்குவம் நமக்கு வரும், என்றார்.

மதுரை கம்பன் கழக நெறியாளர் வேலாயுதம், அனிருத் நுரையீரல் சிகிச்சை மையத் தலைவர் டாக்டர் விவேகானந்தன், வானொலி நிலைய அதிகாரி சண்முக.ஞானசம்பந்தன், திருவிளையாடல் புராண ஆராய்ச்சி மைய மாநில தலைவர் முருகேசன், செயலாளர் கண்ணன், பொருளாளர் சரவணன், அமைப்புச் செயலாளர் சங்கரநாராயணன், திண்டுக்கல் மாவட்ட தலைவர் சேகர் பங்கேற்றனர். உதவிப்பேராசிரியர் விக்னேஷ் ஒருங்கிணைத்தார். உதவிப் பேராசிரியர் விநாயக சுந்தரி நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !