மூணாறு சுப்பிரமணிய சுவாமி கோயில் கும்பாபிஷேகம்: அரோகரா கோஷத்துடன் கோலாகலம்
மூணாறு: மூணாறில் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் அரோகரா கோஷங்கள் முழங்க கும்பாபிஷேகம் வெகுசிறப்பாக நடந்தது.
பழமை வாய்ந்த இந்த கோயிலில், பூஜை உள்ளிட்ட ஐதீகங்கள், பழநி தண்டாயுதபாணி கோயிலை பின்பற்றப்பட்டு வருகிறது. இந்து தேவஸ்தானம் கட்டுப்பாட்டில் உள்ள கோயிலில் பல்வேறு காரணங்களால் கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக கும்பாபிஷேகம் நடைபெறவில்லை. தற்போது கோயில் புனரமைக்கப்பட்டு கும்பாபிஷேகம் இன்று அரோகரா கோஷங்கள் முழங்க வெகு சிறப்பாக நடந்தது. தேவன் கிருஷ்ணன் நம்பூதிரி, நாராயணன் நம்பூதிரி ஆகியோர் தலைமையிலான குழு கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தனர். மவுண்ட் கார்மல் பேராலயம் பாதிரியார் அபிஜித், மூணாறு முஸ்லீம் ஜாமத் தலைமை இமாம் ஆஷிக்கவுசரிஅல்ஹாசிமி ஆகியோர் உள்பட ஆயிரக்கணக்கான பக்தர்கள் கும்பாபிஷேகத்தில் பங்கேற்றனர். கும்பாபிஷேகத்திற்கு பின் ட்ரோன் மூலம் தீர்த்தம் தெளிக்கப்பட்டது. பக்தர்களுக்கு நாள் முழுதும் அன்னதானம் வழங்கப்பட்டது. இந்து தேவஸ்தானம் குழு தலைவர் பாபுலால், துணை தலைவர் கணேசன், செயலாளர் ஜெயராம், பொருளாளர் வைத்தீஸ்வரன் உள்ளிட்டோர் விழாக்கான ஏற்பாடுகளை செய்தனர்.
ஆறுதல்: தற்போது மூணாறில் பருவ மழை பொய்த நிலையில், தினமும் மதியத்திற்கு பிறகு சிறிய அளவில் மழை பெய்கிறது. நேற்று மதியத்திற்கு பிறகு துவங்கிய மழை இரவு வரை நீடித்தது. அதனால் இன்று காலை மழை பெய்யும் என அஞ்சினர். ஆனால் மழையின்றி நேற்று காலை வெயில் காணப்பட்ட நிலையில், கும்பாபிஷேகம் முடிந்த பிறகு பகல் 12:00 மணிக்கு மழை துவங்கியது. அதனால் பக்தர்கள் சற்று ஆறுதல் அடைந்தனர்.