வீரக்கல் சவுடம்மன் கோயில் கும்பாபிஷேகம்; ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு
திண்டுக்கல்; திண்டுக்கல் மாவட்டம் ஆத்துார் தாலுகா வீரக்கல்லில் ஒக்கலிகர் காப்பு படவனவார் குல தாயாதிகளுக்கு பாத்தியப்பட்ட சவுடம்மன் கோயில் கும்பாபிஷேகம் கோலாகலமாக நடந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.
திண்டுக்கல் மாவட்டம் ஆத்துார் தாலுகா வீரக்கல்லில் ஒக்கலிகர் காப்பு படவனவார் குல தாயாதிகளுக்கு பாத்தியப்பட்ட சவுடம்மன் கோயில் உள்ளது. இங்கு செல்வ விநாயகர், சுந்தரேஸ்வரர், கால பைரவர் சன்னதிகளும் உள்ளன. 2012ல் கும்பாபிஷேகம் நடந்த நிலையில் தற்போதைய கும்பாபிஷேக திருப்பணியில் கூடுதலாக தெப்பக்குளமும் அமைக்கப்பட்டுள்ளது. கடந்த சில மாதங்களாக நடந்த திருப்பணி நிறைவுற்ற நிலையில் கும்பாபிஷேக விழா நிகழ்வுகள் ஜூன் 21ல் பண்டார பேழை, தீர்த்தம் அழைப்புடன் துவங்கியது. இன்று காலை வரை 4 கால யாக சாலை பூஜைகள் நடந்த நிலையில் கடம் புறப்பாடாகி கும்பங்களில் புனித நீருற்ற கும்பாபிஷேகம் நடந்தது. திண்டுக்கல் அபிராமியம்மன் கோயில் தலைமை சிவாச்சாரியர் குருநாத குருக்கள் தலைமையிலான குழுவினர் நடத்தி வைத்தனர். முன்னாள் அமைச்சர்கள் ஐ.பெரியசாமி, சக்கரபாணி, திண்டுக்கல் எம்.பி., சச்சிதானந்தம், எம்.எல்.ஏ.,க்கள் வேடசந்துார் சாமிநாதன், நிலக்கோட்டை அய்யனார், முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் பழனிச்சாமி, பரமசிவம் உள்பட ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.
விழா ஏற்பாட்டினை கோயில் அறங்காவலர் குழு தலைவரும், வேடசந்துார் முன்னாள் எம்.எல்.ஏ.,வுமான காந்திராஜன், படவனவார் குல சங்க தலைவர் ராமசாமி, செயலாளர் முத்துச்சாமி, இணை செயலாளர் ராமமூர்த்தி, பொருளாளர் சிவசுப்ரமணியன், அறங்காவலர் குழு உறுப்பினர்கள் முருகன், சவுடப்பன், துணை தலைவர் வேல்வழுதி, துணை செயலாளர்கள் ராஜன், ரவிச்சந்திரன், சட்ட ஆலோசகர்கள் முருகேசன், லோகநாதன், தணிக்கையாளர் சவுடையா, குழு உறுப்பினர் விட்டல்நாயக்கன்பட்டி முருகேசன் உள்ளிட்ட நிர்வாகிகள் செய்திருந்தனர்.