ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலில் எழுத்தறிவித்தல் நிகழ்ச்சி
காளஹஸ்தி; திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலில் நேற்று வியாழக்கிழமை எழுத்தறிவித்தல் ( அக்ஷரப்யாசம்) நிகழ்ச்சி சாஸ்திரப் பூர்வமாக நடைபெற்றது. கோயில் வளாகத்தில் உள்ள குருதட்சிணா மூர்த்தி சுவாமி சன்னதி முன்னிலையில் சிறப்பு கலசம் ஏற்பாடு செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. கோயில் வேதப் பண்டிதர்கள் வேத மந்திரங்கள் முழங்க குழந்தைகளை எழுத்துக்களை எழுத வைத்தனர் . சட்டமன்ற உறுப்பினர் சுதீர் ரெட்டி மற்றும் நிர்வாகக் குழுத் தலைவர் கொட்டே சாய் பிரசாத் மற்றும் கோயில் செயல் அதிகாரி பி.கே. வெங்கடேஸ்வர்லு ஆகியோர் குழந்தைகளுக்கு பலகைகளை வழங்கி, எழுத வைத்தனர்.
பஞ்சபூத ஸ்தலத்தில், தட்சிணாமூர்த்தி மற்றும் ஞான பிரசுனாம்பிகை தாயாரின் திருவடிகளில் கல்வியைத் தொடங்குவது, குழந்தைக்கு வாழ்நாள் முழுவதும் அறிவையும்,கல்வி வெற்றியையும் வழங்கும் என்று நம்பி, ஆந்திரப் பிரதேசம், தமிழ்நாடு, கர்நாடகா மற்றும் தெலங்கானா மாநிலங்களைச் சேர்ந்த பெற்றோர்கள் இந்த விழாவிற்காகவே இங்கு வருகிறார்கள். இங்கு வருகை தந்த பெற்றோர்களுக்கு கோயில் அதிகாரிகள் தங்களது சிறப்பு வாழ்த்துக்களைத் தெரிவித்தனர். மேலும், அவர்களது பிள்ளைகளுக்குத் தேவையான கல்விப் பொருட்களைக் கோயில் சார்பில் வழங்கப்பட்டது.