திருக்கச்சூர் கோவில் தேருக்கு புதிய பாதுகாப்பு அறை அமைப்பு
மறைமலைநகர்: திருக்கச்சூர் கோவிலில் புதிதாக கட்டப்பட்ட பாதுகாப்பு அறையில் தேர் நிலை நிறுத்தப்பட்டது. சிங்கபெருமாள் கோவில் அடுத்த திருக்கச்சூர் கிராமத்தில் பழமை வாய்ந்த அஞ்சனாட்சி தாயார் உடனுறை கச்சபேஸ்வரர் கோவில் உள்ளது. ஹிந்து சம ய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இக்கோவில், சோழர்கள் காலத்தில் கட்டப்பட்டது.
இக்கோவிலில், சித்திரை மாத பிரம்மோத்சவம், தேரோட்டம் விமரிசையாக நடைபெறும். 33 ஆண்டுகளாக நடைபெறாமல் இருந்த தேரோட்டம் புதிதாக தேர் செய்யப்பட்டு கடந்த 2015ம் ஆண்டு முதல் மீண்டும் நடந்து வந்தது. கடந்த நான்கு ஆண்டுகளாக திருப்பணி காரணமாக தேரோட்டம் நடக்காததால், கிழக்கு மாடவீதியில் இரும்பு தகடுகள் வைத்து கோவில் தேர் மூடப்பட்டு இருந்தது. மழை காலத்தில் தேரின் உட்புறத்தில் தண்ணீர் செல்வதால் தேர் வீணாகும் அபாயம் ஏற்பட்டது.
இதற்காக ‘கான்கிரீட்’ சுவர்கள் அமைக்க பக்தர்கள் கோரிக்கை வைத்தனர். இதையடுத்து, ஹிந்து சமய அறநிலையத்துறை சார்பில், 23 லட்சம் ரூபாயில் 2024ம் ஆண்டு மே மாதம் பணிகள் தொடங்கின. தற்போது பணிகள் முடிந்து தேர் கிரேன் உதவியுடன் பாதுகாப்பு அறையில் நிறுத்தி மூடி வைக்கப் பட்டுள்ளது.