உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திண்டுக்கல்: சிவன் கோயில்களில் பிரதோஷ வழிபாடு

திண்டுக்கல்: சிவன் கோயில்களில் பிரதோஷ வழிபாடு

திண்டுக்கல்: தேய்பிறை பிரதோஷ நாளான நேற்று, திண்டுக்கல் மாவட்ட சிவன் கோயில்களில் சிறப்பு பூஜைகள் நடந்தன.

திண்டுக்கல் அபிராமி அம்மன் கோயிலில் ஞானாம்பிகை, காளஹஸ்தீஸ்வரர், பத்மகிரீஸ்வரர், அபிராமி அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன. மாலை 4:00 மணிக்கு நந்தி, கொடிமரம், காளஹஸ்தீஸ்வரர், பத்மகிரீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், மகா தீபாராதனை நடந்தது. ஆர்.எம்., காலனி - வி.ஐ.பி., நகர் சொர்ணாம்பிகை உடனுறை குபரேலிங்கேஸ்வரர் கோயிலில் நந்தி, ஸ்ரீகுபேரலிங்கேஸ்வரருக்கு 16 வகையான சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து சிறப்பு அலங்காரம் செய்ய பக்தர்களுக்கு பிரசாதம் விநியோகம் செய்யப்பட்டது. திண்டுக்கல் காந்திஜி புதுரோடு ஆதிசிவன் கோயில், மேற்கு ரதவீதி சிவன் கோயில், முள்ளிப்பாடி ஆஞ்சநேயர் கோயில், ரயிலடி விநாயகர் கோயில், கூட்டுறவு நகர் விநாயகர் கோயில், பழநி ரோடு பத்ரகாளியம்மன் கோயில் உட்பட திண்டுக்கல்லில் உள்ள அனைத்து சிவன் கோயில்களில் பிரதோஷத்தை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகள் நடந்தன. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். மேலும் எம்.வி.எம்., நகர் தென் திருப்பதி வெங்டாஜலபதி கோயில் லட்சுமி நரசிம்மர் சன்னதியில் சிறப்பு அபிஷேகம், தீபாராதனைகள் நடந்தன. நாகல்நகர் பாரதிபுரத்தில் உள்ள சாய்பாபா கோயிலில், விபூதி அபிஷேகம், பால் அபிஷேகம், அன்னதானம் நடந்தது.

நத்தம் : கோவில்பட்டி கைலாசநாதர் கோயிலில் ஆனி பிரதோஷ விழா நடந்தது. இதனை முன்னிட்டு நந்தி சிலைக்கு பால், பழம், பன்னீர், விபூதி, சந்தனம், இளநீர், தீர்த்தம் உள்ளிட்ட 16 வகையான அபிஷேகங்களும், தீபாராதனைகளும் நடந்தன. தொடர்ந்து மேளதாளம் முழங்க சுவாமி புறப்பாடும் நடந்தது. பின்னர் மூலவர் செண்பகவல்லி கைலாசநாதருக்கு சிறப்பு அபிஷேகமும், அலங்காரமும், தீபாராதனைகளும் நடந்தன. இதில் சுற்று வட்டாரங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து சென்றனர். அய்யாபட்டி ருத்ர லிங்கேஸ்வரர் கோயில், சிறுமலை சிவசக்தி சித்தர் பீடம், காம்பார்பட்டி ஆத்ம லிங்கேஸ்வரர் 1008 சிவன் கோயில், குட்டூர் உண்ணாமலை அம்பாள் உடனுறை அண்ணாமலையார் கோயில், கணவாய்ப்பட்டி சிவன் கோயில்களிலும் பிரதோஷ விழா நடந்தது.

கன்னிவாடி : கன்னிவாடி சோமலிங்க சுவாமி கோயிலில், தேய்பிறை பிரதோஷ பூஜை நடந்தது. மூலவர், ஓம்கார நந்திக்கு பால், இளநீர், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட திரவிய அபிஷேகம் நடந்தது. சிறப்பு மலர் அலங்காரத்துடன், மகா தீபாராதனை, அன்னதானம் நடந்தது. சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். மவுனகுரு சுவாமி கோயில், காரமடை ராமலிங்க சுவாமி கோயில், சின்னாளபட்டி சதுர்முக முருகன் கோயிலில், பிரதோஷ அபிஷேக, ஆராதனைகள் நடந்தது.

பழநி : பழநி முருகன் கோயிலில் உள்ள கைலாசநாதர் சன்னதி, கிழக்கு ரத வீதி பெரியநாயகி அம்மன் கோயில், கோதைமங்கலம் பெரியாவுடையார் கோயில், பாலசமுத்திரம் அமுதீஸ்வரர் கோயில், மதனபுரம் அண்ணாமலை உண்ணாமுலை நாயகி அம்மன் கோயில், அ.கலையம்புத்துார் கல்யாணியம்மன் கைலாசநாதர் கோயில் உட்பட அனைத்து கோயில்களிலும் மாலையில் பிரதோஷ நேரத்தில் சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனைகள் நடந்தன. திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !