கோவை கொடிசியா ஜெகந்நாதர் கோயிலில் சிறப்பு திருமஞ்சன சேவை
கோவை கொடிசியா ஜெகந்நாதர் கோயிலில் சிறப்பு திருமஞ்சன சேவை
கோவை; கொடிசியா அருகே உள்ள ஜெகந்நாதர் கோயிலில், பகவான் ஜெகந்நாதர், பலதேவர், சுபத்ரா தேவியாருக்கான திருமஞ்சன சேவை கோலாகலமாக நடந்தது. பக்தர்கள் தயார் செய்த 1008 உணவுப்பதார்த்தங்கள் பகவானுக்கு அர்ப்பணிக்கப்பட்டு, சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கம் (ஹரே கிருஷ்ணா அமைப்பினர்) கோவையில் நடத்தவுள்ள ஜெகன்னாதர் தேர்த்திருவிழாவை முன்னிட்டு, நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை பகவான் ஜெகன்னாதர், பலதேவர் மற்றும் சுபத்ரா தேவியாருக்கான திருமஞ்சன சேவை (ஸ்னான யாத்திரை), கொடிசியா அருகேயுள்ள இஸ்கான் ஜெகன்னாதர் ஆலயத்தில் மிகுந்த கோலாகலத்துடன் நடைபெற்றது. பக்தி வினோத சுவாமி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு பக்தி பரவசத்துடன் வழிபட்டனர்.
ஒடிஷா மாநிலம் பூரி நகரில் ஒவ்வோர் ஆண்டும் ஜெகன்னாதர் தேர்த்திருவிழாவிற்கு முன்பாக நடைபெறும் பாரம்பரிய ஸ்னான யாத்திரையைப் பின்பற்றி, மரத்தினாலான ஸ்ரீ ஜெகன்னாதர், பலதேவர் மற்றும் சுபத்ரா தேவியாருக்கு வருடத்தில் ஒருமுறை மட்டுமே செய்யப்படும் திருமஞ்சன அபிஷேகம் நடைபெற்றது. பக்தர்கள் இடைவிடாது ஹரே கிருஷ்ண மகாமந்திரத்தையும், "ஜெய் ஜெகன்னாத்" என்ற கோஷத்தையும் முழங்கியபடி ஹரி நாம சங்கீர்த்தனம் செய்தனர். சங்குகள் முழங்க, இந்தியாவின் பல்வேறு புனித நதிகளிலிருந்து கொண்டுவரப்பட்ட நீராலும், பலவகை மலர்களாலும் பகவானுக்கு சிறப்பான திருமஞ்சன அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் ஜெகன்னாதர் பெருமானின் திவ்ய லீலைகள் குறித்து ஆன்மீக உரை நடைபெற்றது. இந்த ஆண்டிற்கான ஸ்ரீ ஜெகன்னாதர் தேர்த்திருவிழா வரும் 18ம் தேதி கோவையில் சிறப்பாக நடைபெற உள்ளது என்று இஸ்கான் அமைப்பினர் தெரிவித்தனர்.