செஞ்சி அருகே கி.பி. 13ம் நூற்றாண்டு கல்வெட்டு ஆய்வாளர்கள் கண்டுபிடிப்பு
செஞ்சி; செஞ்சி அருகே கி.பி. 13 ஆம் நூற்றாண்டை சேர்ந்த கல்வெட்டை ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
செஞ்சி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி தமிழ் துறை பேராசிரியர், திருவண்ணாமலை மாவட்ட வரலாற்று ஆய்வு நடுவத்தின் தலைவர் முனைவர் சுதாகர், தமிழ் துறை மூன்றாம் ஆண்டு மாணவர்கள் பிரகாஷ், பிரவீன் ஆகியோர் செஞ்சி அடுத்த ஒதியத்தூர் கிராமத்தில் கள ஆய்வு செய்தனர். இதில் அங்குள்ள பெரிய சுனை என்னும் இடத்தில்பாறை ஒன்றில் கல்வெட்டு ஒன்று இருப்பதை கண்டு பிடித்தனர்.
இது குறித்து முனைவர் சுதாகர் கூறியதாவது; இங்குள்ள பாறையில் வெட்டப்பட்டுள்ள கல்வெட்டில் 12 வரிகள் உள்ளன. கல்வெட்டை ஆய்வு செய்ததில் இது கி.பி., 13ம் நூற்றாண்டை சேர்ந்த பொத்தப்பி சோழர் காலத்து கல்வெட்டு என்பது தெரிகிறது. கி.பி. 12-13ம் நூற்றாண்டில் இப்பகுதியை ஆட்சி செய்த பிற்கால சோழர்களின் பொத்தப்பிசோழன் கீழ் செஞ்சி பகுதி இருந்தது என்பதை அறிய முடிகிறது. இங்குள்ள கல்வெட்டில் பல்லவ வாணராய பொண் வீர சதப நாயக்கரான மகன் பொத்தப்பி சோழனின் முன்னோர்களை குறிப்பிட்டுள்ளார்கள். தெலுங்கு சோழர்களான பொத்தப்பி சோழர்கள் கி.பி., 8 முதல் கி.பி. 13 ஆம் நூற்றாண்டு வரை ஆந்திராவில் உள்ள கடப்பா, நெல்லூர், சித்தூர் ஆகிய பகுதிகளை ஆட்சி செய்தனர். இவர்கள் தற்போதைய கடப்பா ஊரை உருவாக்கிவர்கள். இவர்கள் தமிழகத்தில் பல்லவர்கள் மற்றும் சோழ பேரரசர்களுக்கு அடங்கிய சித்தர்சர்களாகவும், பின்னர் சுதந்திரமான மன்னர்களாகவும் விளங்கினர்.
கல்வெட்டு இந்த கல்வெட்டில் மூன்றாவது வரியில் பேரழகன் என்பவன் அங்குள்ள சுனையை வெட்டியுள்ளான் என்பதையும், அப்போதைய மன்னன் பொத்தப்பி மன்னனை புகழ்ந்தும் எழுதி உள்ளனர். கல்வெட்டின் இடது வலதுபுறம் உள்ள சிற்பத்தில் குதிரை மீது ஒரு வாளுடன் பெண் அமர்ந்துள்ளார். அருகில் யானையின் தலை மட்டும் உள்ளது. மேற்புறத்தில் சங்கு மற்றும் சக்கரம் காட்டப்பட்டுள்ளது. இது போரில் யானையின் தலையை வெட்டி பெண்ணின் வீரத்தை குறிப்பதாக இருக்கலாம். இவ்வாறு முனைவர் சுதாகர் கூறினார்.