உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சென்னையில் தெய்வச் சேக்கிழார் விழா; திருச்செந்தூர் தல புராணம் வெளியீடு

சென்னையில் தெய்வச் சேக்கிழார் விழா; திருச்செந்தூர் தல புராணம் வெளியீடு

சென்னை; திருவான்மியூர், சேக்கிழார் ஆராய்ச்சி மையம் மற்றும் ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவம் மற்றும் ஆராய்ச்சி பல்கலை இணைந்து நடத்திய 34ஆம் ஆண்டு தெய்வச் சேக்கிழார் விழா, சென்னையில் இன்று நடந்தது இதில் தருமையாதீன பன்னிரு திருமுறை மற்றும் திருச்செந்தூர் தல புராணம் ஆகிய நூலினை தருமபுரம் ஆதீனம் ஸ்ரீஶ்ரீ மாசிலாமணி ஞானசம்பந்த தேசிக பரமாசாரிய சுவாமிகள் வெளியிட முதல் பிரதியினை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பெற்றுக் கொண்டார். விழாவில் ஹேமா மோகன், சேக்கிழார் ஆராய்ச்சி மையத்தின் தலைவர் நீதியரசர் ஜெகதீசன், திருக்கயிலாய பரம்பரை ஸ்ரீலஶ்ரீ சத்தியஞான மகாதேவ தேசிக பரமாசாரிய சுவாமி, சேக்கிழார் ஆராய்ச்சி மையத்தின் செயலர் சிவாலயம் மோகன், ரசிக ரஞ்சனி சபா தலைவர் சந்தானகிருஷ்ணன் மற்றும் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.


விழாவில் அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசியதாவது:


பன்னிரு திருமுறைகள் வாயிலாக, எளிமையான தமிழில், சிவபெருமானை யார் வேண்டுமானாலும் துதி செய்ய முடியும். சைவ சமயத்தின் முக்கிய குருமார்களான சம்பந்தர், அப்பர், சுந்தரர் மற்றும் மாணிக்கவாசகர் பாடிய பதிகங்களை தவிர, மற்ற குருக்களான காரைக்கால் அம்மையார், நம்பி ஆண்டார் நம்பி, சேந்தனார் என, பலர் பாடிய பதிகம் இந்நுாலில் உள்ளது.


இந்த சைவ திருமுறைகளில் உள்ள தமிழ் வளத்துக்கு ஈடு இணை இல்லை. ஏதோ பண்டிதர்கள் மட்டும் படித்து, பண்டிதர்களுக்கே உரியது என நினைத்துக் கொண்டிருந்த தமிழை, சாதாரண மக்களும் தெரிந்துக் கொண்டு பாட, இந்த திருமுறைகள் உதவின. பலவிதமான தமிழ் இலக்கிய மரபுகளை, இந்த திருமுறைகளில் நாம் பார்க்கலாம். உதாரணமாக, ‘தாண்டகம்’ என்ற தமிழ் யாப்பு வடிவத்தை, திருநாவுக்கரசர் தான் தமிழில் அதிகம் பயன்படுத்தினார். அதனால் தான், அவர், ‘தாண்டக சதுரர்’ என புகழப்படுகிறார். இடமிருந்து வலம் படித்தாலும், வலமிருந்து இடம் படித்தாலும், ஒரே மாதிரியான ஓசை தருகின்ற பாடல்கள்; ஒரே சொல் திரும்ப திரும்ப வந்து, வேறு வேறு அர்த்தம் தரும் வகையிலான, ‘யமக’ பாடல்களை கொடுத்து, தமிழோடு சம்பந்தர் விளையாடி உள்ளார். எனவே, அவர், ‘தமிழ் ஞானசம்பந்தர்’ என போற்றப்படுகிறார். இந்தப் பாடல்களை தொகுக்கும் போதே, அவை எந்தப் பண்ணில் பாட வேண்டும் என்பதை, ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே எழுதி வைத்துள்ளனர்.


இன்று வரை, ஓதுவா மூர்த்திகள் அதே முறையை பின்பற்றி, கோவில்களில் பாடி வருகின்றனர். அதேபோல, யாழ், உடுக்கை, கொட்டு போன்ற பல இசைக் கருவிகளை வைத்து, திருமுறைகள் இசைக்கப்பட்டன என்பதற்கான ஆவணங்களும் நம்மிடம் உள்ளன. இப்படி ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலான,  இசை பாரம்பரியம் உள்ளவை நம் திருமுறைகள். இத்திருமுறைகளை பாடி, கோவில் திருவிழாக்களிலும், தினசரி பூஜைகளிலும் நடனம் கூட ஆடப்பட்டது. எந்தெந்த பாடல்களுக்கு எப்படி நடனம் ஆட வேண்டும் என்பது ஆவணப்படுத்தப்பட்டு உள்ளது. தமிழின் அடையாளம் பன்னிரு திருமுறைகள். துதி பாடல்கள் என்பதையும் தாண்டி, இந்த திருமுறைகளுக்கு பல துன்பங்களை தீர்க்கும் சக்தி உள்ளது. இது, பலரின் அனுபவப்பூர்வமான நம்பிக்கை. இன்றைய இளைஞர்களுக்கு ஓலைச்சுவடிகளை படிக்கத் தெரியவில்லை. ஓலைச்சுவடிகளோ, செப்பேடுகளோ இருக்க வேண்டிய நம் கைகளில், மொபைல் போன் உள்ளது. அந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, திருமுறைகளை, ‘செயலி’ வாயிலாக, இளைய தலைமுறைக்கு எடுத்துச் செல்ல வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !