உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஆடிப்பெருக்கு எப்படி வழிபட வேண்டும்?.. வழிபாடும் சிறப்பும்!

ஆடிப்பெருக்கு எப்படி வழிபட வேண்டும்?.. வழிபாடும் சிறப்பும்!

தமிழகத்திலுள்ள நீர் நிலைகளில் ஆடி மாதத்தில் நீர் வரத்து அதிகமாகி பெருக்கெடுத்து ஓடும். நதிகளும் நீர் நிரம்பி காணப்படும். பயிர்  செழிக்க வளம் அருளும் அன்னை காவிரிக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக, ஆடி 18-ல் பதினெட்டாம் பெருக்கு விழா, நதிக்கரைகளிலும்  ஆற்றங்கரைகளிலும் கொண்டாடப்படுகிறது. தமிழ்நாட்டில் உள்ள காவிரி, பெண்ணை, பொருணை ஆகிய மூன்று நதிகளிலும் ஆடிப்  பதினெட்டு கொண்டாடுவதை, மூவாறு பதினெட்டு எனக் குறிப்பிடுவார்கள்.


தட்சிணாயன புண்ணிய காலம் என்று சூரியனின் தென்திசைப் பயணத்தைக் குறிப்பிடுவர். இதில் முதல்  மாதமாக ஆடியில் விவசாயிகள் உழவுப்பணிகளைத் துவங்குவர். ஆடிப்பட்டம் தேடிவிதை என்று சொல்வதுண்டு. நாடு செழிக்கத்  தேவையான நீரைப் போற்றிப் பாதுகாக்கவேண்டும் என்ற நோக்கத்தில் நதியைத் தெய்வமாகப் போற்றி வழிபட்டவர்கள் நம் முன்னோர்.  அதற்குரிய வழிபாட்டு நாளாக ஆடி பதினெட்டாம் நாளைத் தேர்ந்தெடுத்தனர். அன்று ஆடிப்பெருக்கு விழா கொண்டாடினர். இந்த விழா  இப்போதும் காவிரிக்கரை மாவட்டங்களில் சிறப்பாக நடக்கிறது. இந்நாளில் தொடங்கும் செயல்கள் இனிதே நிறைவேறும் என்பது ஐதீகம்.  ஆடி18ல் காவிரியில் நீராடி, காவிரி அன்னையை வழிபட்டு மஞ்சள், குங்குமம், மலர், வஸ்திரம் சமர்ப்பிப்பர். புதுமணத்தம்பதிகள்  புதுமஞ்சள் கயிறு மாற்றிக் கொள்வர். ஆடிப்பெருக்கன்று, வீட்டில் கொடிவகைகளான அவரை, புடலை போன்ற பயிர்க்குழி  போடுவதும் உண்டு. நகை, பொருட்கள் வாங்கவும் நல்லநாள்.


மங்களச் சரடு: தென்னிந்தியாவில் திரிவேணி எனப்படும் பவானி கூடுதுறையில் சங்கமேஸ்வரர் கோயிலின் நடை ஆடிப்பதினெட்டு  அன்று அதிகாலையில் திறக்கப்படும். மக்கள் கூடுதுறையில் நீராடிவிட்டு இறைவனை வழிபடுவார்கள். அம்மனுக்கு தேங்காய், பழம், பூ,  காதோலை கருகமணி படைத்து ஆராதனை செய்வார்கள். பூஜையில் வைத்த மஞ்சள் சரடினை பெண்கள் கழுத்திலும் ஆண்கள்  வலதுகை மணிக்கட்டிலும் அணிந்து கொள்வர். இதனால் வீட்டில் மங்கள காரியங்கள் தடையின்றி நடைபெறும் என்பது நம்பிக்கை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !