உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருத்தணி முருகன் கோவிலில் ஆடிப்பரணி விழா; காவடிகளுடன் குவிந்த பக்தர்கள்

திருத்தணி முருகன் கோவிலில் ஆடிப்பரணி விழா; காவடிகளுடன் குவிந்த பக்தர்கள்

திருத்தணி; திருத்தணி முருகன் கோவிலில், இன்று நடந்த ஆடிப்பரணி விழாவில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் காவடிகள் எடுத்தனர். பரணி விழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் மலைக்கோவிலில் குவிந்துள்ளனர்.


திருத்தணி முருகன் கோவிலில், ஆடி கிருத்திகை மற்றும் மூன்று நாள் தெப்பத் திருவிழா, நேற்று ஆடி அஸ்வினியுடன் தொடங்கியது. அதிகாலை 4:30 மணிக்கு, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், பச்சை மாணிக்க கல், தங்கவேல், தங்க கிரீடம் மற்றும் வைர ஆபரணங்கள் அணிவித்து, சிறப்பு தீபாராதனை நடந்தது. இன்று ஆடி பரணியும், நாளை ஆடி கிருத்திகை மற்றும் முதல் நாள் தெப்பத்திருவிழாவும் நடக்கிறது. ஆடிப்பரணியை முன்னிட்டு ஆறு மணி நேரம் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து, மூலவரை தரிசித்தனர். தமிழகம், ஆந்திரா, கர்நாடகம் மற்றும் புதுச்சேரி உட்பட, அண்டை மாநிலங்களில் இருந்து, ஆயிரக்கணக்கான வாகனங்களில் பக்தர்கள் திருத்தணிக்கு வந்தனர். பின், மலையடிவாரத்தில் உள்ள சரவணபொய்கை மற்றும் மேல்திருத்தணியில் உள்ள நல்லாங்குளம் ஆகிய இடங்களில், பக்தர்கள் புனித நீராடி, மலர், மயில், பால் மற்றும் பன்னீர் காவடிகளுடன், மலைக்கோவிலுக்கு சென்று மூலவரை தரிசித்தனர். சில பக்தர்கள் தங்களது வேண்டுதலை நிறைவேற்ற, மொட்டை அடித்தும் காவடிகள் எடுத்தும், முருகப்பெருமானை தரிசித்தனர்.


நாளை ஆடி கிருத்திகை மற்றும் முதல் நாள் தெப்பத்திருவிழா நடக்கிறது. மேலும், வரும் 7ம் தேதி இரண்டாம் நாள் தெப்பமும், 8ம் தேதி மூன்றாம் நாள் தெப்பத்துடன் ஆடி கிருத்திகை விழா நிறைவு பெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் அறக்காவலர் குழுத்தலைவர் ஸ்ரீதரன், இணை ஆணையர் ரமணி, அறங்காவலர்கள் உஷாரவி, மோகனன், சுரேஷ்பாபு, நாகன் மற்றும் கோவில் ஊழியர்கள் செய்து வருகின்றனர். திருவள்ளூர் மாவட்ட எஸ்.பி., சாய் பிரணீத் தலைமையில், 2,250 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !