உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஏகாம்பரநாதர் கோவிலில் அன்னப்பாவாடை காட்சி

ஏகாம்பரநாதர் கோவிலில் அன்னப்பாவாடை காட்சி

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில், அன்னப்பாவாடை நிறைமணி காட்சி, நேற்று நடந்தது.

இறைவனால் படைக்கப்பட்ட காய்கறிகள், பழவகைகள், தானியங்கள் உள்ளிட்டவற்றை இறைவனுக்கே அன்போடு படையலிடப்படுவதை அன்னப்பாவாடை நிறைமணி காட்சி என அழைக்கப்படுகிறது.

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில் ஆண்டுதோறும் ஆவணி மாதம் மூல நட்சத்திர தினத்தன்று, அன்னப்பாவாடை நிறைமணி காட்சி நடைபெறும். அதன்படி நேற்று காலை 10:00 மணிக்கு, சிறப்பு அன்னப்பாவாடை நிறைமணி காட்சி நடந்தது.

இதில், மூலவர் சன்னிதியில், அனைத்து வகையான பழங்கள் மற்றும் காய்கறிகள் மூலம் தோரணங்கள் கட்டப்பட்டு, புளியோதரை, தயிர் சாதம், சர்க்கரை பொங்கல், வெண் பொங்கல், எலுமிச்சை சாதம் உள்ளிட்ட சித்ரான்னங்கள் சுவாமிக்கு படையலிடப்பட்டது.

பவித்ர உத்சவம் காஞ்சிபுரம் ஏகாம்பர நாதர் கோவிலில் ஏழு நாட்கள் நடைபெறும் பவித்ர உத்சவம், கடந்த 20ம் தேதி இரவு 7:30 மணிக்கு தொடங்கியது.

இதில், உத்சவர் விநாயக பெருமான், சன்னிதி தெருவில் உள்ள அரசு காத்த அம்மன் கோவில் வரை வீதியுலா சென்றார். கடந்த 21ம் தேதி முதல், நாளை மறுநாள் வரை, தினமும் இரவு 7:30 மணிக்கு ஏலவார்குழலியுடன், மலர் அலங்காரத்தில் எழுந்தருளும், ஏகாம்பரநாதர் அரசு காத்த அம்மன்கோவில் வரை வீதியுலா செல்கிறார்.

அதன்படி, நான்காவது நாளான நேற்று, சுவாமி வீதியுலா நடந்தது.

பவித்ர உத்சவம் நிறைவு நாளான வரும் 26ம் தேதி இரவு 7:30 மணிக்கு மஹா பூர்ணாஹூதி எனப்படும் மஹா நிறைவு வேள்வியும், மூலவருக்கு யாக சாலையில் பூஜை செய்த பவித்ரம் சமர்ப்பணம் செய்யப் படுகிறது.

தொடர்ந்து ஏலவார்குழலியுடன், மலர் அலங்காரத்தில் எழுந்தருளும் ஏகாம்பர நாதர், நான்கு ராஜவீதிகளிலும் பவனி வருகிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !