ஆவணி அவிட்டம்; குருகுலம், திருமண மண்டபங்களில் பூணூல் மாற்றி சிறப்பு பூஜை
திருச்சி: ஆவணி அவிட்டம் - திருமண மண்டபம், குருகுலங்களில் இந்துக்களில் ஒருசாரார் பூணூல் மாற்றி சிறப்பு பூஜை செய்து வழிபாடு செய்தனர்.
ஆவணி மாத பவுர்ணமியையொட்டி வரும் அவிட்ட நட்சத்திரத்தில் ஆவணிஅவிட்ட விரதம் மேற்கொள்ளப்படுகிறது, இந்நாளில் முறையாக காயத்ரி உபதேசம் பெற்றவர்கள் மற்றும் உபநயணம் செய்துக்கொண்ட பிராமணர்கள் மற்றும் விஸ்வகர்மா, செட்டியார் என பலபிரிவினர் ஆற்றங்கரைகளில் அல்லது குளக்கரைகளில் தங்களுடைய பழைய பூணூலை எடுத்துவிட்டு புதிய பூணூலை அணிந்துக்கொள்வர். திருமணம் ஆகாதவர் ஒரு முடியையும்(ஒரு பூணூல்), திருமணம் ஆனவர் இரண்டு பூணூலையும், திருமணம் ஆகி தந்தையை இழந்தவர்கள் மூன்று பூணூலையும் அணிந்துக்கொள்வர். அதன்படி இன்று ஆவணி அவிட்டத்தையொட்டி காவிரிபடித்துறை, ஸ்ரீரங்கம் தனியார் மண்டபம் மற்றும் குருகுலங்களில், இந்துக்களில் ஒருசாரார் மற்றும் சமூகத்தினர் உபநயணம் எனப்படும் பூணூல் மாற்றி தேவர்களுக்கும், ரிஷிகளுக்கும் தர்ப்பணம் செய்து வழிபாடுசெய்தனர். அதனைத் தொடர்ந்து காயத்ரி மந்திரங்களையும் ஜெபித்து வழிபட்டனர். இன்றையதினம் வேதங்களை படிக்க துவங்க நல்லநாள் என்பதால் உபன்யாசம் செய்பவர்களிடம் சென்று வேதபாராயணங்களையும் கற்றுக்கொள்வர்.