ஆந்திராவில் இருந்து விநாயகர் சிலைகள் திருத்தணிக்கு லாரிகள் மூலம் வருகை
திருத்தணி: ஆந்திர மாநிலத்தில் இருந்து லாரிகள் மூலம், திருத்தணி கோட்டத்திற்கு பல்வேறு வடிவங்களில் விநாயகர் சிலைகள் கொண்டு வரப்படுகின்றன.
தமிழகம் முழுதும், வரும் 14ம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா வெகு விமரிசையாக கொண்டாடப்படவுள்ளது. அந்த வகையில், திருத்தணி வருவாய் கோட்டத்தில், விநாயகர் சதுர்த்தி விழாவை ஒட்டி, 500க்கும் மேற்பட்ட தெருக்களில் விநாயகர் சிலைகள் வைத்தும், விநாயகர் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடத்தியும் கொண்டாடப்படவுள்ளது.
இதற்காக, ஆந்திர மாநிலம் சித்துார், நகரி, புத்துார் உள்ளிட்ட பகுதிகளில் தயாரிக்கப்படும் பல்வேறு வடிவங்களில் அமைந்த விநாயகர் சிலைகள், தற்போது லாரிகள் மூலம் திருத்தணி வருவாய் கோட்டத்திற்கு கொண்டு வரப்படுகின்றன.
அதாவது, 3 அடி உயரத்தில் இருந்து, 9 அடி உயரமுள்ள விநாயகர் சிலைகள், லாரிகள் மூலம் கொண்டு வரப்படுகின்றன. தற்போது, விநாயகர் சதுர்த்தி விழா நெருங்கி வருவதால், கிராமம் மற்றும் நகரங்களில் இருந்து, விழாக்குழுவினர் விநாயகர் சிலைகளை தேர்வு செய்தும், முன்பணம் செலுத்தியும் முன்பதிவு செய்து வருகின்றனர். குறைந்தபட்சம், ஒரு விநாயகர் சிலை, 1,500 ரூபாய் முதல் 15 ஆயிரம் ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
திருத்தணி, பள்ளிப்பட்டு, ஆர்.கே.பேட்டை மற்றும் திருவாலங்காடு ஆகிய ஒன்றியங்களில், முக்கிய சாலைகள் ஓரம் விநாயகர் சிலைகள் வைத்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது.