மரகத சிலை மாயமான கோவிலில் உற்சவர் சிலைக்கு நடைபெற்ற வழிபாடு
சித்தாமூர்: பெருக்கரணை கிராமத்தில் மரகத கல்லால் செய்யப்பட்ட, 2.50 அடி உயர மூலவர் சிலையை மர்ம நபர்கள் திருடிச் சென்றதை அடுத்து, கோவில் நிர்வாகம் சார்பில், உற்சவர் சிலைக்கு வழிபாடு செய்யப்பட்டு வருகிறது.
சித்தாமூர் அருகே பெருக்கரணை கிராமத்தில் பிரசித்தி பெற்ற மரகத தண்டாயுதபாணி கோவில் உள்ளது. 2.50 அடி உயர மரகத கல்லால் செய்யப்பட்ட மரகத தண்டாயுதபாணி சிலையை, மூலவராக வழிபாடு செய்தனர். கடந்த 1ம் தேதி இரவு 8:00 மணிக்கு பூஜை முடிந்து, கோவில் நிர்வாகத்தினர் கோவிலை பூட்டிச் சென்றனர். நேற்று முன்தினம் காலை 7:30 மணிக்கு கோவிலுக்கு சென்றபோது, கோவில் வெளிப்புற கதவின் பூட்டுகள் உடைக்கப்பட்டு, உள்ளே இருந்த தண்டாயுதபாணி சிலை மற்றும் வெள்ளிப் பொருட்கள் திருடு போனது. இதுகுறித்த புகாரின்படி, சித்தாமூர் போலீசார் ஆறு தனிப்படைகள் அமைத்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர். இந்நிலையில், கோவில் நிர்வாகம் சார்பில், மூலவர் இருந்த பீடத்தில் உற்சவர் சிலையை வைத்து பூஜை செய்து, வழிபாடு செய்யப்படுகிறது.