PUBLISHED ON : ஜூலை 06, 2025

'உங்களில் ஒருவன்' இந்த தம்பி; சரிதானே?
சொல் தம்பி... தமிழக போலீஸ் கொலை செய்த மடப்புரம் கோவில் காவலாளி அஜித்குமாரின் தாயிடம் பேசிய தமிழக முதல்வர், 'நடக்கக் கூடாதது நடந்து போச்சும்மா' என்றார்; இதற்குபதில், 'அரசு ஊழியர்கள்தான் அரசு என மார் தட்டும் நான் ஒத்துக் கொள்கிறேனம்மா; என் அரசு குற்றம் செய்து விட்டது' எனச்சொல்லி இருக்க வேண்டுமா?
'அவசியமில்லை... அவர் சொன்னதில்தான் 'சமூகநீதி' நிறைந்து நிற்கிறது!
சரி... மலையாள ஒன் படத்தில் முதல்வராக வரும் மம்மூட்டி செய்வது போலவே, அன்றொரு காலத்தில் காவல் நிலையங்களுக்கு 'ஆச்சரிய' வருகை தந்து, காவல் நிலைய பதிவேடுகளை புரட்டிப் பார்த்தபடி அசத்திய நம் முதல்வர், அப்படத்தில் வரும் பொய்யான 'நகை திருட்டு' புகாருக்கு மம்மூட்டி சுடச்சுட நீதி வழங்குவது போல் இங்கேயும் வந்து வழங்கி இருக்கலாம் என்று ஆசைப்பட்டாயா?
பின்னே... சினிமா ஹீரோவுக்கு இணையான அழகில் ஜொலிக்கும் முதல்வரின் தீவிர ரசிகனல்லவா நான்!
'நிகழ்ந்த அனைத்து சம்பவங்களின் முழு காரணகர்த்தாக்கள் பற்றி தற்போது முதல்வர் அறிந்திருப்பார் எனும் நிலையில், சி.பி.ஐ., விசாரணைக்கான முதல்வரது அழைப்பு நீதியை மேலும் தாமதமாக்குமே' என்று வருந்தினாயா?
யோசித்தேன்... ஆனால், 'நிர்வாகத்திறன் மிக்க எனது முதல்வரிடம் மறைக்கப்பட்ட விஷயங்களையும், சி.பி.ஐ., வெளிக்கொண்டு வரக்கூடும்' என்பதால் சமாதானம் ஆகி விட்டேன்!
ஓ... சபாஷ்; சரி... இறந்த அஜித்குமாரின் தாயிடம் தமிழ் சுவாசிக்கும் நம் முதல்வர், 'ஸாரிம்மா...' சொல்லி வருந்தியதைக் கேட்டதும் என்ன நினைத்தாய்?
அய்யோ... சுக்கு நுாறாய் நொறுங்கிப் போனேன்; ஆனால், ஓர் உயிர் பறித்த குற்றத்திற்கு, 'ஸாரிம்மா...' சொல்லிய அவரது பெரிய மனதை நினைத்து சிலிர்த்து எழுந்து விட்டேன்!
ஆக... 'இந்தியாவில் சட்டம் - ஒழுங்கை சிறப்பாக நிலைநாட்டும் முதல்வர்' என்றால்...
ஈ.வெ.ரா., சிலை அற்ற 'அண்ணா அறிவாலயம்' மீது ஆணையாக... தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்தான்.