PUBLISHED ON : ஜூன் 22, 2025

குடும்பங்கள் கொண்டாடும் க்ளைமாக்ஸ்!
மனநல பாதிப்பில் இருந்து மீண்ட நாயகியும், போதை பிடியில் இருந்து மீண்ட நாயகனும் தம்பதி ஆகின்றனர். தனியார் மருத்துவமனையில் இவர்களது குழந்தை, பிறந்த சில மணி நேரத்தில் காணாமல் போக, அதைத்தேடும் நாயகனது முயற்சிகளே கதையின் அடுத்தடுத்த கட்டங்கள்!
குழந்தை கடத்தல் கும்பலின் சர்வதேச சங்கிலி தொடர்பு பற்றிய 'வெப் சீரிஸ்' ஆக மாற்றாமல், உள்ளூர் அளவில் நின்று கொண்ட எளிமையே இவ்வெற்றிக்கான முதல்படி. 'த்ரில்லர்' களத்தில் உணர்ச்சிகர கதையைச் சொல்ல வந்த இயக்குனர் நெல்சன் வெங்கடேசன், 'கிளாமர்' பாடல், 'பிரேக் அப்' பாடல் என சில இடங்களில் தடம் மாறிஇருக்கிறார்!
மனநல பாதிப்பின் சுவடுகளையும், குழந்தை மீதானபாசத்தையும் புதுவிதமாய் காட்டியிருக்கிறார் நிமிஷா சஜயன்.முரளி வாரிசின் முகம் காதல் தோல்வியின் வலியை குவித்த அளவிற்கு, தந்தையின் மென் உணர்வுகளை சரியாக வெளிப்படுத்தவில்லை!
வில்லனின் நோக்கம் பரவச மனநிலையா அல்லது கோடிகளில் குளிப்பதா; முதலாவது என்றால், 'செய்த தப்புக்கான தண்டனை தள்ளிப் போயிருக்கு' என்கிற தீர்க்க தரிசனமும், அச்சமும் எதற்கு; இரண்டாவது என்றால், குறுகிய வட்டத்தில் இயங்குவது ஏன்?
கடவுள், கோவில் பின்னணியில் கட்டமைக்கப்பட்ட 'க்ளைமாக்ஸ்' வெகுஜன ரசனைக்கான விருந்து! மருத்துவர் முதல் கசாப்பு கடைக்காரர் வரை விசாரணையை சந்து பொந்துகளில் எல்லாம் எடுத்துச் செல்லும் காவலராக பாலாஜி சக்திவேலின் பங்களிப்பு கச்சிதம்!
விறுவிறுப்பான கதையோட்டத்தாலும், எதிர் பார்ப்பை பூர்த்தி செய்யும் நடிகர்களாலும் வெற்றிக்கோட்டை தொட்டிருக்கிறது படைப்பு.
ஆக....
அதர்வாவுக்கு தாராளமாக கை தட்டலாம்; ஆனால், கிரீடம் சூட இது போதாது!