PUBLISHED ON : ஜூன் 29, 2025

இக்கதையில் இதெல்லாம் நிகழாமல் இருந்திருந்தால்...
மும்பை காவலரான விஜய் ஆன்டனி வீட்டில் நாளிதழ் விசிறி எறியப்படாமல் இருந்திருந்தால், உயர் அதிகாரி விஜய் ஆன்டனிக்கு போன் செய்யாமல் இருந்திருந்தால்... அவர் போதையிலேயே இருந்திருப்பார். ஊசி போட்டு உடலை கருக வைக்கும் கொலையாளியைத் தேடி சென்னை வந்திருக்க மாட்டார்!
'டி.என்.பி.எஸ்.சி.,' தேர்வுக்குத் தயாராகும் இளைஞனிடம் கொலையாளியை கண்டறிய உதவி கேட்டிருக்க மாட்டார். இளைஞனும் சித்தர் அருளால் கொலையாளியை அடையாளம் காண்பதாக நேரத்தை வீணாக்கியிருக்க மாட்டான். நாமும், 'கறுப்பு தோல் நிறத்தால் காயப்பட்டவரின் பழி உணர்ச்சி' எனும் அரைகுறை படைப்பை பார்த்திருக்க மாட்டோம்!
அரிதான மூளைத்திறனால், தான் பார்த்த ஒரு காட்சியின் அடிப்படையில் மொத்த சம்பவத்தையும் ஒரு நபரால் கணிக்க முடிகிறது. இப்படியொரு சுவாரஸ்ய பாத்திரத்தை வடிவமைத்துவிட்டு, அதற்குரிய பொறுப்பை அதற்கு வழங்காததுதான் தோல்விக்கு காரணம். கதாநாயகனாக இருக்க வேண்டிய பாத்திரம் எடுபிடியாக அலைகிறது!
தன் புத்திக்கூர்மையை பார்வையாளர்களுக்கு உணர்த்த, 'உங்க வாட்ச் தப்பான டைம் காட்டுது' என விஜய் ஆன்டனி சொல்வது... வார்ர்ரே வாவ்! சக காவலர்களாக வருபவர்களுக்கு 'ஓகே சார்... எஸ் சார்...' கடந்து வேறு ஏதாவது வேலை கொடுத்திருக்கலாம்!
கறுப்பு தோல் நிறத்தால் புறக்கணிக்கப்பட்ட பாத்திரத்தை, 'த்ரில்லர்' அனுபவத்திற்காக எதிர்மறை பாதையில் பயணிக்க வைத்திருக்கிறது திரைக்கதை. கதையாகவும், கதாபாத்திரங்களாகவும் முழுமை பெறாத ஆக்கத்தால் பாதாளத்தில் பாய்ந்திருக்கிறான் மார்கன்.
ஆக....
நம் எதிர்பார்ப்போ... கதைக்கு பொருந்தும் விஜய் ஆன்டனி; கிடைப்பதோ எதற்கும் பொருந்தாத... ப்ப்ப்ச்ச்!