PUBLISHED ON : ஜூலை 06, 2025

சிவா மட்டும் இல்லேன்னாக்கும்...
அப்பப்போ 'சிரிப்பு மருந்து' தடவ ஆளே இல்லாம போயிருக்கும்!
'இதுக்கு மேல இருக்க முடியாதுய்யா'ன்னு நாம தவிச்சுட்டு இருக்குற கடைசி காட்சியில, 'என்னாலேயும் முடியலைய்யா'ன்னு அந்த பையன் குத்த வைச்சு உட்கார்றான் பாரு; 'அவன் 'கக்கா' போறதுலேயும், இலையில துடைச்சிட்டு எந்திரிச்சு வர்றதுலேயும், இதுக்காக அவன் அப்பனான சிவா அவனை பாராட்டுற விதத்துலேயும் கலைநயம் ஒளிஞ்சிருக்கு'ன்னு நீ சொல்வேன்னா... யோவ்... உனக்கு இந்த படம் பிடிக்கும்யா!
உன் மகனோட செருப்பு 4,000 ரூபாய்; வருஷத்துக்கு மூன்றரை லட்ச ரூபாய் ஸ்கூலுக்கு செலவு பண்ணி உன் மகனை படிக்க வைக்கிற நீ, அவனுக்கு ஒரு பிச்சைக்காரனோட போர்வையை போர்த்திவிட்டு ரோட்டுல துாங்க வைப்பியா; 'ம்ம்ம்... வைப்பேனே...'ன்னு விதண்டாவாதம் பேசுவேன்னா... சிவா இப்படி பண்றப்போ நீ கைதட்டுவே!
ஒரு சின்னப்பய... அவங்க அப்பன் கூட ரோடு ரோடா சுத்துறதுதான் கதை. 'அந்த சின்னப்பய பைத்தியமா, அவன் அப்பன் பைத்தியமா, அவங்க ஆத்தாக்காரி பைத்தியமா, இல்ல... இவனுங்க மூணு பேரையும் இவ்வளவு நேரமா பார்த்துட்டு இருக்குற நாம பைத்தியமா'ன்னு யோசிக்க வைக்கிற திரைக்கதை!
'எங்கே போறோம்'னு தெரியாம அப்பனும் மகனும் போயிட்டு இருக்குற ஆளே இல்லாத சாலை ஓரத்துல ஒரு குளம்; அதுல, அஞ்சலி குளிச்சுட்டு இருக்கு. அஞ்சலி யாருன்னா... சிவாவோட ஸ்கூல் ப்ரெண்ட். 5வது வகுப்புல பிரிஞ்சதுக்கு அப்புறம் அன்னைக்குதான் அவங்க பார்த்துக்குறாங்களாம்!
படம் முடியுறதுக்கு முன்னால மறுபடியும் ஒரு குளம் வருது. ஆனா, அங்கே அஞ்சலி இல்லை. பழைய குளம் வழியா 'க்ளைமாக்ஸ்' வந்திருந்தா கூட படத்தை மன்னிச்சிருக்கலாம்.
ஆக...
'இதில் நடிக்காமல் இருந்திருந்தால் சிவா இதை எப்படி கலாய்த்திருப்பார்' என யோசிக்க வைக்கும் படம்!