சொன்னா நம்ப மாட்டீங்க பப்பிக்கு கணக்கும் தெரியும்!
சொன்னா நம்ப மாட்டீங்க பப்பிக்கு கணக்கும் தெரியும்!
ADDED : மே 31, 2025 06:54 AM

சேலம், ஏற்காட்டில், 48வது கோடை விழா மலர்கண்காட்சி முன்னிட்டு, கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் நடந்த செல்லப்பிராணிகள் கண்காட்சியில் நம் நாட்டு இன மற்றும் வெளிநாட்டு இன நாய்கள், பறவைகள், பூனைகள், மாடுகள் என, 'சகல' செல்லங்களும் பங்கேற்றன.
ஜே.எஸ்.டபுள்யு நிறுவனம் சார்பில், மகாராஜா குழுவினர் அழைத்து வந்த நாய்கள், போதை பொருள் கண்டறிதல், வெடிகுண்டு பெட்டியை கண்டு பிடித்தல், க்ரைம் நடந்த இடங்களில் உள்ள தடயம் சேகரித்தல் உள்ளிட்டவற்றை சிறப்பாக கையாண்டு வரவேற்பை பெற்றன. நடைபயிற்சியின்போது மயங்கி விழுந்த எஜமானரை காப்பாற்ற, அவரது மார்பு பகுதியில் காலை வைத்து அழுத்தி முகத்தை தடவி கொடுத்து, முதலுதவி பெட்டியைக் கொண்டு வந்து தந்த ஒரு நாய், பார்வையாளர்களின் மனதை நெகிழ வைத்தது.
ஒருவர், 'மூன்றும் மூன்றும் எவ்வளவு' எனக்கேட்டதும், நாய், 6 முறை குரைத்தது. அதேபோன்று கூட்டல், கழித்தல் படி கேட்க, அதன் எண்ணிக்கையை குரைத்து காட்டியும் அசத்தியது. நாய்களின் பாசம், நுண்ணறிவு, சொல்படி நடத்தல் போன்ற செயல்களை பார்த்த பலர் ஆச்சரியத்தில் மூழ்கினர். கீழ்படிந்த நாய்களின் உரிமையாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. வெளிநாட்டு இன பூனை, கிளிகள் உள்ளிட்டவையும் கண்காட்சிக்கு அழகு சேர்த்து பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்தின.