ADDED : ஜூன் 18, 2025 08:33 AM

'கிரீவ்ஸ் 3 வீலர்ஸ்' நிறுவனம், 'டி435 சூப்பர்' என்ற டீசல் ஆட்டோவை மேம்படுத்தி அறிமுகம் செய்துள்ளது. இந்த ஆட்டோ, பயணியர் போக்குவரத்துக்கு 'சிட்டி' மற்றும் சரக்கு போக்குவரத்துக்கு 'கார்கோ' என இரு வகையில் வந்துள்ளது.
இதில், 435 சி.சி., சிங்கிள் சிலிண்டர், ஏர் கூல்டு, டீசல் இன்ஜின் பயன்படுத்தப்படுகிறது. இது, 'ஒ.பி.டி., டி2' உமிழ்வு விதிமுறைக்கு ஏற்ப மேம்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஆட்டோவின் மொத்த எடை, 456 கிலோவாக உள்ளது. இதனால், 330 கிலோ எடை வரை சுமக்க முடியும். அதிக கிரவுண்ட் கிளியரன்ஸ் கிடைக்கவும், எடையை நிலையாக சுமக்கவும், 10 அங்குல சக்கரங்களுக்கு பதிலாக, முதல் முறையாக 12 அங்குல சக்கரங்கள் வழங்கப்பட்டுள்ளன.
10.5 லிட்டர் டீசல் டேங்க் உள்ள இந்த ஆட்டோவின் மைலேஜ், 35 முதல் 38 கி.மீ., வரை தருகிறது. டாப் ஸ்பீடு, 55 கி.மீ.,ராக உள்ளது.
பயணியர் ஆட்டோ இரு மாடல்களிலும், சரக்கு ஆட்டோ மூன்று மாடல்களிலும் கிடைக்கின்றன. நாடு முழுதும் உள்ள அனைத்து விற்பனை மையங்களில், விற்பனையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.