ADDED : செப் 24, 2025 07:57 AM

டாடா கார்களின் வடிவமைப்பை வேகப்படுத்த, 'விர்ச்சுவல் ரியாலிட்டி, செயற்கை நுண்ணறிவு' எப்படி உதவுகிறது?
கார் வடிவமைப்பை, வேகமாகவும் சாமர்த்தியமாகவும் செய்ய இந்த டிஜிட்டல் கருவிகள் பயன்படுத்தப்படுகின்றன. விர்ச்சுவல் ரியாலிட்டி வாயிலாக, நிஜ உலக டிஜிட்டல் கார் மாடல்களை உருவாக்க முடியும். இதன் வாயிலாக, வடிவமைப்பை ஆராய்ந்து, அடுத்தக்கட்ட முடிவுகளை விரைவாக எடுக்கலாம். தேவையில்லாத செலவுகள் மற்றும் நேரம் குறைவதோடு, அதிக கார் மாடல்களை உருவாக்கும் அவசியமும் ஏற்படாது.
வடிவமைப்பை தெளிவாக காட்சிப் படுத்துதல், காப்புரிமை ஆவணப் படுத்துதல், வடிவ மைப்பு சாத்தியக்கூறு மதிப்பீடு ஆகிய முக்கிய இடங்களில் செயற்கை நுண்ணறிவு பயன்படுகிறது. இதில், மனித கற்பனைக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுவதால், உதவி தேவைப்படும் இடத்தில் மட்டும் ஏ.ஐ., பயன் படுத்தப்படும்.
டாடா நிறுவனத்தின் வடிவமைப்பு மையங்கள் எப்படி ஒருங்கிணைந்து செயல்படுகின்றன?
உலகளவில் பிரிட்டனின் கோவென்ட்ரி, இத்தாலியின் டூரின் மற்றும் இந்தியாவின் புனேவில் மொத்தம் மூன்று வடிவமைப்பு மையங்கள் உள்ளன. அதாவது, இந்தியாவில் காட்சிப் படுத்தப்பட்ட 'அவின்யா' முன்மாதிரி மின்சார கார் முதலில் பிரிட்டனில் வடிவமைக்கப்பட்டது.
உள்நாட்டு கலாச்சாரம், சுற்றுச்சூழல் மற்றும் சாலைகளை பொறுத்து உற்பத்தி நிலைக்கு கொண்டு வர, புனே வடிவ மைப்பு மையம் முக்கிய பங்காற்றுகிறது.
பிரிட்டனில் உள்ள வடிவமைப்பு மையம், ஆடம்பர ஸ்டைலிங், நவீன பொறியியல் மேம்பாடுகளிலும், இத்தாலி மையம், வளமான வாகன பாரம்பரியம் மற்றும் கைவினைத்திறனிலும் அதிக கவனம் செலுத்துகின்றன. இவற்றுக்கு தலைமையாக புணே வடிவமைப்பு மையம் செயல்படுகிறது.
டாடா கார்களின் வடிவமைப்பு எந்த இடத்தில் இருந்து துவங்கும்?
முதலில், பயணியர் இடவசதி, பூட் ஸ்பேஸ், வாடிக்கையாளர்களுக்கு நல்ல உணர்வு வழங்கும் வகையில் காரின் உட்புறம் வடிவமைக்கப்படும். இதற்கேற்ப காரின் வெளிப்புறம் நவீன தோற்றத்தில் வடிவமைக்கப்படுவதால், மொத்த வடிவமைப்பும் சமநிலை அடைகிறது.
புதிய 'சியாரா' எஸ்.யூ.வி.,யின் தோற்றம், 1990களில் வந்ததது போல இல்லையே?
இந்திய கார் வடிவமைப்புகளில், சியாரா எஸ்.யூ.வி., முக்கிய சின்னமாக திகழ்கிறது. இந்த காருக்கு மரியாதை செலுத்தும் விதமாக, ஒரு முன்மாதிரி காரை உருவாக்க மட்டுமே திட்டமிட்டு, 2020 கார் கண்காட்சியில் நல்ல வரவேற்பு கிடைத்ததால், இந்த காரை உற்பத்திக்கு கொண்டு வர முடிவு செய்தோம். அதன் பழைய வடிவமைப்பில் வரவில்லை என்றாலும், அதன் உணர்வை பிரதிபலிக்க முயற்சித்துள்ளோம்.
அஜய் ஜெயின், டாடா மோட்டார்ஸ், இந்திய வடிவமைப்பு மையத்தின் தலைவர்