/
வாராவாரம்
/
கனவு இல்லம்
/
சிறப்பு கட்டுரை
/
மழைக்கால கட்டுமானத்தில் சவால்கள்!
/
மழைக்கால கட்டுமானத்தில் சவால்கள்!
ADDED : ஜூன் 20, 2025 11:33 PM

வீடு கட்டும் பணிகள் மழைக்காலத்தில் தொடங்கப்பட்டால், பல்வேறு சவால்களை எதிர்கொள்ள வேண்டி இருக்கும். சரியான முன்னெச்சரிக்கைகள் இல்லாமல் இருந்தால், கட்டடத்தின் தரம் பாதிக்கப்படும். பணிகள் தாமதமாகும், செலவுகளும் அதிகரிக்கும் என எச்சரிக்கின்றனர் பொறியாளர்கள்.
'காட்சியா' செயற்குழு உறுப்பினர் சரவணகுமார் கூறியதாவது:
மழைக்கால கட்டுமானம் சவாலானது. ஆனால் சரியான திட்டமிடல், முறையான பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் தளத்தில் தேவையான கருவிகளை தயாராக வைத்திருப்பதன் வாயிலாக, தரமான கட்டடம் அமைக்க முடியும். இதனால், கட்டட ஆயுளும் நிலைத்திருக்கும்.
n மழைக்கால கட்டுமானத்தில், தளத்தில் மழைநீர் தேங்கி நிற்காமல் இருப்பது மிக முக்கியம். மழை பெய்யும்போது தண்ணீர் தளத்தில் சேரும்போது, அது ஒரு இடத்தில் தேங்கி நிற்காமல் ஓட வேண்டியது அவசியம்.
இதற்காக தற்காலிகமாக, சிறிய பள்ளங்கள் அல்லது குழாய்கள் வைத்து தண்ணீர் வெளியே செல்வதற்கான வழியை உருவாக்க வேண்டும். இதை, 'தற்காலிக வடிகால் அமைப்பு' என்பார்கள். கடும் மழை நேரங்களில் ஆழமான தோண்டலை தவிர்க்க வேண்டும்.
n தோண்டிய பகுதிகளில் சரிவிலிருந்து பாதுகாக்க உறுதிப்படுத்த வேண்டும். அடித்தளப் பணிகள் செய்யும் போது, மழைநீர் மற்றும் நிலத்தடி நீர் அகற்ற, 'டி- -வாட்டரிங் பம்ப்' கட்டாயமாக தளத்தில் இருக்க வேண்டும்.
n அடித்தள வேலைகளை, தற்காலிக 'கவரிங்' கொண்டு பாதுகாப்பது சிறந்தது. மழையால் பாதிக்கப்பட்ட மணல் அல்லது கற்கள் பயன்படுத்தக் கூடாது. ஸ்டிரக்சுரல் இன்ஜினியர் பரிந்துரை செய்யும் பொருட்களை பயன்படுத்தலாம்.
n மழைக்காலத்தில் கான்கிரீட் தயாரிக்கும் போது, அதன் தரத்தை நன்கு கண்காணிக்க வேண்டும். அதிக ஈரப்பதம் காரணமாக தண்ணீர் - சிமென்ட் விகிதம் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. இதனால் கான்கிரீட் வலிமை, தரம் குறையும்.
n தற்காலிக மின் இணைப்புகள் முறையாக பூச்சு செய்யப்பட்டும், நிலைபடுத்தப்பட்டும் இருக்க வேண்டும். கட்டுமானப் பொருட்கள் வாகனங்களில் கொண்டு வரும்போது, சாலையின் நிலைமைக்கு ஏற்ப, சிறப்பு கவனம் தேவை.
n மழைக்காலத்தில் இயற்கை தாமதங்களை கணக்கில் கொண்டு, பணிக்கு கூடுதல் நாட்கள் ஒதுக்க வேண்டும். தினசரி புகைப்பட பதிவுகள் மற்றும் மழைநாள் பதிவுகள் வைத்திருப்பது பாதுகாப்பாகும்.
இவ்வாறு, அவர் கூறினார்.