/
வாராவாரம்
/
கனவு இல்லம்
/
சிறப்பு கட்டுரை
/
அஸ்திவார பள்ளத்தில் நீர் ஊற்று தொடரும் நிலையில் என்ன செய்வது?
/
அஸ்திவார பள்ளத்தில் நீர் ஊற்று தொடரும் நிலையில் என்ன செய்வது?
அஸ்திவார பள்ளத்தில் நீர் ஊற்று தொடரும் நிலையில் என்ன செய்வது?
அஸ்திவார பள்ளத்தில் நீர் ஊற்று தொடரும் நிலையில் என்ன செய்வது?
ADDED : மே 18, 2025 07:11 AM
சொ ந்தமாக நிலம் வாங்கி வீடு கட்ட வேண்டும் என்ற ஆசை யாருக்கு தான் இருக்காது, இதனால், நிலம் வாங்குவதில் அனைவரும் கவனம் செலுத்துகின்றனர். ஏற்கனவே சொந்த வீடு இருந்தாலும் தங்களுக்காக தனியாக ஒரு நிலம் வாங்க வேண்டும் என்ற எண்ணம் அனைவருக்கும் இருக்கிறது.
இந்த வகையில், நிலம் வாங்கி வைத்தவர்கள் அதில் வீடு கட்ட வேண்டும் என்று திட்டமிட்டால் அதற்கான பட்ஜெட் மலைப்பை ஏற்படுத்துவதாக உள்ளது. இதில் பெரும்பாலான இடங்களில், எதிர்காலத்தில் வீடு கட்டலாம் என்று மக்கள், நிலம் வாங்கும் போது ஆவணங்கள், அக்கம் பக்கத்து சூழல் போன்ற விஷயங்களை மட்டுமே கவனிக்கின்றனர்.
பல ஆண்டுகள் கழித்து அங்கு வீடு கட்ட வேண்டும் என்று வரைபடம் தயாரித்து பணிகளை துவக்கும் போது தான் பல்வேறு புதிய பிரச்னைகள் தெரிய வருகின்றன. மண் பரிசோதனை செய்து, கட்டட அமைப்பியல் பொறியாளர் வழிகாட்டுதல் அடிப்படையில் அஸ்திவாரத்துக்கான பள்ளம் தோண்டும் பணிகள் மேற்கொள்ளப்படும்.
இதில் அஸ்திவாரத்துக்கான பள்ளம் தோண்டும் போது அதில் கிடைக்கும் மண்ணை எப்படி வெளியேற்றுவது என்பதற்கான திட்டமிடல் இருக்க வேண்டும். குறிப்பாக, அதே மனையில் கூடுதல் காலியிடம் இருக்கும் நிலையில், அஸ்திவார பள்ளத்தில் கிடைத்த மண்ணை அங்கே கொட்டி வைக்கலாம்.
இதற்கு அடுத்தபடியாக அஸ்திவார பள்ளம் தோண்டும் இடத்தில் மண் ஈரமாக இருந்தால் உரிமையாளர்கள் அலர்ட் ஆக வேண்டும். இதில் ஒரு சில நாட்கள் பள்ளத்தை அப்படியே விட்டால் அதில் நீர்க்கசிவு அல்லது ஊற்று ஏற்படுகிறதா என்பதை துல்லியமாக கவனிக்க வேண்டும்.
சில இடங்களில் அஸ்திவாரத்துக்காக தோண்டப்பட்ட ஆறு அடி ஆழ பள்ளத்தில் தொடர்ந்து நீர்க்கசிவு அல்லது ஊற்று ஏற்பட வாய்ப்புள்ளது. இது போன்ற இடங்களை அப்படியே கைவிட்டுவிட வேண்டியது தான் என்று மக்கள் நினைப்பது சரியான முடிவு அல்ல. இது போன்ற பிரச்னை ஏற்பட்டால் பதற்றம் அடையாமல், கட்டட அமைப்பியல் பொறியாளர், புவியியல் ஆய்வாளர் ஆகியோருடன் ஆலோசித்து, அடிப்படை காரணத்தை தடுப்பதற்கான நடவடிக்கை எடுக்கலாம்.
இத்தகைய இடங்களில் அஸ்திவாரம் அமைப்பதற்கு என்று பரிந்துரைக்கப்படும் பிரத்யேக வழிமுறைகளை அறிந்து அதன் அடிப்படையில் செயல்பட வேண்டும். இதில் பள்ளத்தின் அடி பக்கம், பக்கவாட்டு பகுதி ஆகியவற்றை ஒட்டி முதலில், கான்கிரீட்டை பயன்படுத்தி தடுப்பு அமைப்பை ஏற்படுத்த வேண்டும்.
அதன் பின் மையப்பகுதியில் அஸ்திவாரத்துக்கான கம்பி கூடுகளை அமைத்து, கான்கிரீட் போடுவதற்கான பணிகளை மேற்கொள்ள வேண்டும். சில இடங்களில் தொடர் நீர்க்கசிவு, ஊற்று பிரச்னையால் மண் உறுதி தன்மை இழக்கும் சூழல் இருந்தால், அதில் கட்டடம் கட்டுவதற்கு அவசரம் காட்டாதீர் என்கின்றனர் கட்டுமான துறை வல்லுனர்கள்.