
'மான்வி, நாம கல்யாணம் பண்ணிக்கலாமா'ன்னு மன்னு கேட்டதும், 'நான் திருநங்கை'ன்னு அவன்கிட்டே சொன்னேன். அதுவரை உருகி உருகி காதலிச்ச அவன்கிட்டே உடனடியா ஒரு மாற்றம்.
'அவனா நீ; உன்னை காதலிச்சேன்னு நினைக்கவே அருவருப்பா இருக்கு. ஒழுங்கு மரியாதையா ஊரை விட்டே ஓடிப் போயிரு!'
'தயவுசெய்து என்னை 'அவன்'னு சொல்லாத மன்னு; நான் ஒரு பெண். இந்த ஆம்பளை முகத்தை தானே நீ விரும்பினே; 'முழுமை பொருந்தியவள்'னு வர்ணிச்சே; இப்போ அசிங்கமாத் தெரியுதா?'
'ஏய்... பேசாதே... உன்னால நண்பர்களுக்கு மத்தியில என் மரியாதை போச்சு. என்னை எல்லாரும் கேவலமா பார்ப்பாங்கன்னு நினைச்சாலே மனசு வலிக்குது!'
'மன்னு... ஞாபகமிருக்கா... ஒருதடவை உன் மூக்குல அடிபட்டு சின்ன தையல் போட்டதுக்கு வலியால நீ துடிச்சுட்டே! நான் என் உயிர் நாடியில அறுவை சிகிச்சை பண்ணியிருக்கேன்; அந்த வலியை உன்னால உணர முடியாது. உடலாலும் மனசாலும் நான் தாங்கி நிற்கிற வலி ரொம்ப பெருசு; உன் மிரட்டல்கள் என்னை ஒண்ணும் பண்ணாது. நான் இந்த ஊர்லதான் இருப்பேன்; முடிஞ்சதை பண்ணிக்கோ!'
'காதலை பகிரவும், பெறவும் பாலினம் ஒரு பொருட்டல்ல'ங்கிறது இந்த மன்னு மாதிரியான மண்ணுக்கு எப்போதான் புரியுமோ!

