
அந்த நாளுக்கு முன்...
நான் மாயா மேனன்; நெறி பிறழாத பத்திரிகையாளர்!சிறப்பு குழந்தையான என் மகன் ஆயூஷின் கடல் பார்க்கும் ஆசையைக் கூட நிறைவேற்ற முடியாத அளவிற்கு, எனக்கு என் தொழில் மேல் ஈடுபாடு! நான் தவறு செய்வது போல் என்னால் கற்பனை பண்ணிப் பார்க்கக் கூட இயலாது!
என்னுடன் இருப்பவர்கள் உண்மையாய் இருந்தாக வேண்டும்; இல்லையெனில், உண்மையை எதிர்கொள்ள வேண்டி வரும்!
அந்த நாள்...
வாகனங்கள் இல்லாத நள்ளிரவு தார்ச்சாலை. மது கிறக்கத்தை சமாளிக்க ஸ்டியரிங்கில் தாளமிட்டபடி என் விரல்கள். என் காருக்கு குறுக்கே, நான் சற்றும் எதிர்பாராத தருணத்தில் ஒருத்தி நுழைய... தடார்ர்ர்ர்...; துாக்கி வீசப்பட்ட அவளை இறங்கிச் சென்று நான் பார்க்கவில்லை!
அந்த நாளுக்குப் பின்...
விபத்து குறித்து வழக்கு பதிவாகாமல் பார்த்துக் கொண்டேன். அந்த விபத்தை புலனாய்வு செய்த பெண் பத்திரிகையாளரை அச்சுறுத்தினேன். விஷயமறிந்த என் கார் ஓட்டுனருக்கு பணம் கொடுத்தேன். நான் காரில் இடித்தது என் வீட்டுப் பணிப்பெண் ருக்சனாவின் மகள் என்பதை அறிந்தும், அவளிடம் உண்மையை மறைத்தேன்!
ஒருநாள்...
இவை அனைத்தையும் நான் அறியாமல் அறிந்திருந்த ருக்சனா, என் மகனுக்கு கடல் காட்டிக் கொண்டிருந்தாள்.
எது நேர்மை... எது வெற்றி... எது வாழ்க்கை?
படம்: ஜல்சா (ஹிந்தி)

