
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு...
'உங்களைத் தேடி உங்கள் ஊரில்' திட்டத்துல கடந்த பிப்ரவரி 1ம் தேதி ராதாபுரம், பழவூர் ஊராட்சி துவக்கப்பள்ளி மதிய உணவு தரத்தை ஆய்வு பண்ணின ஆட்சியர், மானுார், சத்திரம் குடியிருப்பு அரசு உயர்நிலைப் பள்ளியையும் ஆய்வு பண்ணியிருந்தா என் மகளுக்கு இந்த கொடுமை நிகழ்ந்திருக்காது!
கடந்த ஓர் ஆண்டா வேதியியல் ஆய்வகம்தான் ஒன்பதாம் வகுப்பு 'பி' பிரிவு வகுப்பறையா இயங்கினது உங்களுக்குத் தெரியுமா; இதனாலதான், வகுப்பு தலைவரா இருந்த என் மகளோட வலது கண்ணை ஆய்வக அமிலக்குடுவை பதம் பார்த்திருச்சு!
பிப்ரவரி 8ம் தேதி சம்பவத்துக்கு சட்டரீதியான நடவடிக்கை கோரி, 'அம்னியாடிக் சவ்வு மாற்று அறுவை சிகிச்சை' நிகழ்ந்த பிப்ரவரி 10ம் தேதி தாழையூத்து காவல் நிலையத்துல புகார் பண்ணினோம். 108/2024 எண் கொண்ட சி.எஸ்.ஆர்., ரசீது கிடைச்சதோட சரி!
அரசுக்கு தந்த மனு அடிப்படையில, கல்வித்துறை அதிகாரிகள் நேர்ல வந்து பார்த்துட்டுப் போனாங்களே தவிர, என் மகளோட மேல்சிகிச்சை பற்றியோ நிவாரண உதவி பற்றியோ ஒரு வார்த்தை கூட பேசலை!
அரசுப்பள்ளியில படிச்சதை தவிர என் மக என்னய்யா தப்பு பண்ணினா; எதுக்காக அவளுக்கு இந்த தண்டனை?
- வகுப்பறையாக இயங்கிய ஆய்வகத்தில் அமிலம் தெறித்து கண் பாதித்த, 14 வயது வர்ஷாவிற்காக நீதி கேட்கும் தாய் சண்முகசுந்தரி, தாழையூத்து, திருநெல்வேலி.