
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு...
நான் விவசாயக்கூலி; என் மகன் வி.ஏ.ஓ.,வா 2015ம் ஆண்டு அரசுப்பணியில சேர்ந்தப்போ எனக்கு அவ்வளவு சந்தோஷம்! உடுமலை கணக்கம்பாளையத்துக்கு அவன் மாற்றலாகி வந்ததும்தான் பிரச்னையே ஆரம்பிச்சது!
பிப்ரவரி 2024ல் இருந்து கடும் மன உளைச்சல்ல தவிச்ச என் மகன், ஏப்ரல் 23ல் உயிரை மாய்ச்சுக்கிட்டான். அவன் எழுதின கடித அடிப்படையில, கிராம உதவியாளர் பணியிடை நீக்கம், அவதுாறு செய்தி வெளியிட்ட பத்திரிகை ஆசிரியர் கைதுன்னு அரசு தரப்பு நடவடிக்கைகள் முடிஞ்சிருச்சு!
இது மட்டும்தான் பொறுப்பான அரசோட கடமையா; 2023ல் துாத்துக்குடி வி.ஏ.ஓ., கொலையானதும், 'தன் கடமையை முறையாக நிறைவேற்றியதன் காரணமாக உயிரிழந்த வி.ஏ.ஓ.,வின் பொறுப்புணர்வையும், கடமை உணர்ச்சியையும் தமிழக அரசு போற்றுகிறது'ன்னு இரங்கல் தெரிவிச்சு, நிதியுதவி, குடும்ப உறுப்பினருக்கு அரசு வேலைன்னு அறிவிச்ச நீங்க என் மகன் இறப்புக்கு மவுனமா இருக்குறது ஏன்?
அய்யா... அரசுப்பணியில இருந்த என் மகனோட நேர்மைக்கு புதுக்கோட்டை வேட்டனுார் கிராம மக்களும், திருப்பூர் அந்தியூர் மக்களும் சாட்சி. நேர்ல ஒருதரம் விசாரிச்சுப் பார்த்து நீதி கொடுங்க!
- நெருக்கடி தந்த பணிச்சூழலால் உயிரை மாய்த்துக் கொண்ட வி.ஏ.ஓ., கருப்புச்சாமியின் தாய் வள்ளிநாயகம், பனைமரத்துப்பாளையம், பொள்ளாச்சி, கோவை.