விரல் சூப்பும் குழந்தையிடம் கண்ணாடி காட்டினால்...!
விரல் சூப்பும் குழந்தையிடம் கண்ணாடி காட்டினால்...!
PUBLISHED ON : ஜூன் 29, 2025

விரல் சூப்புதல், உதடு, நகங்களை கடித்தல், வாய் வழியாக சுவாசித்தல், பற்களை கடித்தல், நாக்கு உந்துதல் என்று தங்களையும் அறியாமல் திரும்ப திரும்ப குழந்தைகள் செய்யும் சில பழக்க வழக்கங்களை, குழந்தையின் நடத்தை-கள் என்று சொல்கிறோம். இதில், விரல் சூப்பும் பழக்கம் குழந்தைகளுக்கு ஆறுதல் அளிப்பதாக இருக்கலாம். குழந்தைகள் தனிமையை, கவலையை உணரும் போது விரல் சூப்புவர். சில சமயங்களில் விளையாடாமல் சலிப்பாக இருக்கும் போது விரல் சூப்ப ஆரம்பித்து விடுவர்.
இந்த பழக்கத்தை தவிர்க்க...
இந்த பழக்கங்கள் ஒன்று ஒண்ணரை வயது வரை இருந்தால் பயம் தேவையில்லை. 2 வயதானதும் தானாகவே இந்த பழக்கத்தை குழந்தை மறந்து விடும். எந்த ஒரு பழக்கமும் இந்த வயதிற்கு மேல் தொடரக்கூடாது.
* விரல் சூப்புவ-து கெட்ட பழக்கம் என்ற எண்ணத்தை குழந்தையிடம் பொறுமையாக சொல்ல வேண்டும். ஒவ்வொரு முறை விரல் சூப்பும் போதும் இதை நினைவுபடுத்த வேண்டும்; கோபப்பட்டு திட்டுவது, அடிப்பது கூடாது.
* விரல் சூப்பும் பழக்கத்தை விட்டு விட்டால் சிறு சிறு பரிசுகள் தந்து ஊக்குவிக்கலாம்.
* குழந்தைகளை தனியாக அமைதியாக இருக்க விடாமல், ஏதாவது வேலைகளில் ஈடுபடுத்திக் கொண்டே இருக்க வேண்டும். உதாரணமாக உட்கார்ந்திருக்கும் போதும், 'டிவி' பார்க்கும் போதும் கையில் ஒரு பொம்மையை கொடுத்து விளையாட வைப்பது, ஓவியங்களை வரைய வைப்பது போன்ற செயல்களை செய்யலாம்.
* விரல் சூப்பும்போது குழந்தையை கண்ணாடி முன் நிறுத்தி, பார்ப்பதற்கு எவ்வளவு அசிங்கமாக உள்ளது பார்; மற்ற வர்கள் பார்த்தால் அவர்களுக்கு எப்படி இருக்கும் என்று சொன்னால், இப்பழக்கத்தை கொஞ்சம் கொஞ்சமாக விட்டுவிட வழிவகுக்கும்.
* விரல் சூப்பும் பழக்கம் அதிகமாக இருந்தால், கையை மடக்க முடியாதவாறு 'ஏஸ் பான்டேஜ்' பயன்படுத்துவது அல்லது மிளகுத்துாள், விளக்கெண்ணெய் போன்ற கசப்பான பொருட்களை விரலில் தடவி விடலாம்.
விரல் சூப்பும் பழக்கம் ஆரம்ப நிலையில் உள்ள குழந்தைகளுக்கு இவை உதவலாம். 6 - 7 வயதிலும் தீவிரமாக இப்பழக்கம் தொடர்ந்தால், முன்புற பற்கள் துருத்திக் கொண்டு வளரலாம். உடனே, பல் மருத்துவரின் ஆலோசனையை பெற வேண்டும். காரணம், மாறிய பல் வரிசை, விரல் சூப்புவதில் இருந்து விடுபட, பல் மருத்துவத்தில் பல வழிகள் உள்ளன. மேலும், மாறிப் போன பல் வரிசையையும், முக அமைப்பையும் சரி செய்து விட முடியும்.
டாக்டர்.ஆர்.வி.அபராஜிதா, வேர் சிகிச்சை சிறப்பு பல் மருத்துவர்97919 06962drrvaparajitha@gmail.com