மத்தியில் செயல்படும் உயிரி எலும்பியல் தொழில்நுட்பம்
மத்தியில் செயல்படும் உயிரி எலும்பியல் தொழில்நுட்பம்
PUBLISHED ON : ஏப் 14, 2024

'ஸ்டெம் செல்' சிகிச்சை, 'ரீஜெனரேடிவ்' சிகிச்சை என்பது பற்றியெல்லாம் அடிக்கடி கேள்விப்படுகிறோம். ஸ்டெம் செல் என்பது நம் உடலில் இருக்கும் மூலச்செல். பிரச்னையான இடத்தில் ஸ்டெம் செல்லை செலுத்தும் போது, தசை, எலும்பு, திசு, தோல் என்று மாறும் ஆற்றல் கொண்டது. ஸ்டெம் செல்லை பயன்படுத்தி செய்யப்படும் 'ஆர்த்தோ பயாலஜி' எனப்படும் உயிரி எலும்பியல் தொழில்நுட்பம் எலும்பியல் துறையிலும் உள்ளது.
தன்னைத் தானே சரி செய்து கொள்ளும் திறன் நம் உடம்பிற்கு இருப்பது அனைவரும் அறிந்த விஷயம்.
சில சமயங்களில் இயல்பான இந்த திறனில் இடைவெளி ஏற்படலாம். அப்படிப்பட்ட நேரத்தில், மருந்துகள், உடற்பயிற்சி, பிசியோதெரபி என்று பல வழிகளில் கோளாறை சரி செய்ய முயற்சிக்கிறோம். இவை கை கொடுக்காத நேரங்களில், அறுவை சிகிச்சை செய்யலாமா என்று ஆலோசித்தால், அதற்கான அவசியம் இருக்காது. மருந்துகளாலும் குணப்படுத்த முடியாது; அறுவை சிகிச்சையும் அவசியம் இருக்காது. இரண்டிற்கும் மத்தியில் எற்படும் இந்த இடைவெளியை நிரப்புவது தான் ஸ்டெம் செல் சிகிச்சை.
ஆரம்ப கட்டத்தில் இடுப்பு எலும்பு மஜ்ஜையிலிருந்து ஸ்டெம் செல் எடுக்கப்பட்டது. நவீன தொழில்நுட்பம் வளர்ந்த பின், ரத்த அணுக்கள், எலும்பு மஜ்ஜை, கொழுப்பு ஆகிய மூன்றிலிருந்தும் எடுக்கிறோம். இதில் ரத்தத்தில் இருந்து எடுக்கப்படும் ஸ்டெம் செல்கள், அடர்த்தி குறைவாக, குறைந்த எண்ணிக்கையில் இருக்கும். பிரச்னையின் தன்மை, தனி நபரின் தேவைக்கு ஏற்ப எந்த இடத்தில் இருந்து எடுக்கலாம் என்பதை மருத்துவர் முடிவு செய்வார்.
நீண்ட நாட்களாக சரியாகாமல் இருக்கும் எலும்பு முறிவு, ஆரம்ப நிலையில் இருக்கும் மூட்டு, எலும்புத் தேய்மானம், தோள்பட்டை பிரச்னைகள் உட்பட பல எலும்பியல் சார்ந்த கோளாறுகளுக்கு ஸ்டெம் சிகிச்சை நல்ல தீர்வாக உள்ளது.
டாக்டர் கோபிநாத்,
எலும்பு, மூட்டு மாற்று அறுவை சிகிச்சை மருத்துவர்,
பி வெல் மருத்துவமனை, சென்னை
96983 00300

